துருவநாராயண் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் செயல் தலைவர் துருவநாராயண் மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:-
காங்கிரசின் சொத்து
துருவநாராயண் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'துருவநாராயணின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளித்துள்ளது. அவர் அடிமட்ட தொண்டர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் கூட. அவரது மறைவு அகில இந்திய காங்கிரசுக்கு மட்டுமல்லாது எனக்கும் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும். அவது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்' என்றார்.
எதிர்க்கட்சி த்லைவர் சித்தராமையா கூறுகையில், 'முன்னாள் எம்.பி.யான துருவநாராயண் மரணம் அடைந்திருப்பதை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் பெரும் இழப்பை கொடுத்துள்ளது. அவரது சாதனைகள் மட்டும் நம்முடைய நினைவாக இருக்கும். துருவ நாராயணை இழந்து வாடும், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது துக்கத்தில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறேன்' என்றார்.
காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறும்போது, 'துருவநாராயண் செயல் தலைவர் என்பதை விட, குடும்பத்தில் ஒருவர். அவர் உடன் பிறக்காத சகோதரர். என்னுடைய இதயத்தின் அருகில் இருந்தவர். கர்நாடக அரசியல், காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பாகும். கடவுள் சில நேரம் கருணை இல்லாமல் ஆகிவிடுவது ஏன்? என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்து துருவ நாராயண். அனைத்து மதம், சமுதாயத்தையும் சமமாக நினைக்க கூடியவர். அவரது இந்த திடீர் மறைவு தாங்க முடியாத துக்கத்தையும், வேதனையும் அளிக்கிறது' என்றார்.
தன்னை எளிமையாக காட்டிக்...
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் துருவநாராயண் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பதை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அரசியல் வாழ்வில் தன்னை எளிமையாக காட்டிக் கொண்டார். அரசியலில் வெற்றி, தோல்வியை சாதாரணமாக எடுத்து கொண்டு, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்தவர். எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருந்து கர்நாடகத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு, இந்த துயரத்தை தாங்கி கொள்ளும் சக்தியை கடவுள் கொடுக்க வேண்டும்' என்றார்.
பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'காங்கிரஸ் செயல் தலைவர், முன்னாள் எம்.பி. துருவநாராயண் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த வேதனையை தாங்கி கொள்ளும் சக்தி கிடைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். இதுபோல், மந்திரிகள், காங்கிரஸ் தலைவர்கள் துருவநாராயண் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.