மைசூருவில் மகிஷாசூரன் தசரா விழா கொண்டாடப்படும்-முன்னாள் மேயர் பேட்டி

வருகிற 24-ந் தேதி மைசூருவில் மகிஷாசூரன் தசரா விழா கொண்டாடப்படும் என்று முன்னாள் மேயர் தெரிவித்துள்ளார்.
மைசூரு:-
மைசூரு நகரத்திற்கு மைசூரு என்று பெயர் வருவதற்கு காரணம் மகிஷாசூரன் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவின்போது மகிஷாசூரன் தசரா விழாவை தலித் சங்கத்தினரும், பிற்படுத்தப்பட்ட சங்கத்தினரும் சேர்ந்து கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மகிஷாசூரன் தசரா விழா கொண்டாடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த ஆண்டு மகிஷாசூரன் தசரா விழாவை கொண்டாட வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இதுபற்றி மைசூரு மாநகராட்சி முன்னாள் மேயர் புருஷோத்தம் மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளாக மகிஷாசூரன் தசரா விழாவை மகாளய அமாவாசை நாளன்று கொண்டாடி வருகிறோம். அதுபோல் இந்த ஆண்டு வருகிற 24-ந் தேதி மகிஷா சூரன் தசரா விழாவை கொண்டாட உள்ளோம். மகிஷாசூரன் அரக்கன் அல்ல. அவர் ரட்சகன் ஆவார். கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது முதல் மகிஷாசூரன் தசராவை கொண்டாட முடியவில்லை. அவர்கள் இடையூறு ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
அரசியல் அமைப்பு சாசன சட்டப்படி யாரும், எந்த கடவுளையும் வணங்கலாம். அப்படி இருந்தும் நாங்கள் மகிஷாசூரன் தசராவை கொண்டாட பா.ஜனதாவினர் இடையூறு செய்வது ஏன்?. இதை கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.