மங்களூரு அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.55 லட்சம் நகை திருடிய வழக்கில் 2 பேர் கைது


மங்களூரு அருகே  தொழில் அதிபர் வீட்டில் ரூ.55 லட்சம் நகை திருடிய வழக்கில்  2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.55 லட்சம் நகைகள் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு-

மங்களூரு அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.55 லட்சம் நகைகள் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில் அதிபர் வீட்டில் திருட்டு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே முல்கி அய்யக்கலா பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ்ஷெட்டி. இவர் தொழில் அதிபர் ஆவார். இந்தநிலையில் அவர் தொழில் சம்பந்தமாக பெங்களூருவுக்கு சென்று வருவது வழக்கம். ஹரீஷ்ஷெட்டி தொழில் சம்பந்தமாக கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி பெங்களூரு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.

பின்னர் ஹரீஷ்ஷெட்டி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 120 பவுன் தங்க நகைகளை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.55 லட்சம் ஆகும். அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து முல்கி போலீசில் தொழில் அதிபர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

அவர்களை பிடிப்பதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று தொழில் அதிபர் வீட்டில் திருடிய நபர்கள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பெங்களூருவுக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த 2 பேரையும் கைது செய்தனர்.

சிறையில் அடைத்தனர்

விசாரணையில், அவர்கள் உடுப்பியை சேர்ந்த கணேஷ் நாயக் (வயது 26), குடகு மாவட்டம் மடிகேரியை சேர்ந்த ரஞ்சித்(26) என்பதும், அவர்கள் தொழில் அதிபர் வீட்டில் ரூ.55 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story