சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றகோரி போராட்டம் அறிவிப்பு; காங். முன்னாள் பெண் கவுன்சிலர் உள்பட 18 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்


சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றகோரி போராட்டம் அறிவிப்பு;   காங். முன்னாள் பெண் கவுன்சிலர் உள்பட 18 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:30 AM IST (Updated: 17 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றகோரி போராட்டம் நடத்துவதாக அறிவித்த எதிரொலியாக காங்கிரஸ் முன்னாள் பெண் கவுன்சிலர் உள்பட 18 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மங்களூரு;

சூரத்கல் சுங்கச்சாவடி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல்-முக்கா இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக சுங்கச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இவை மங்களூரு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது. ஏற்கனவே 30 கி.மீட்டருக்கு முன்பதாக மற்றொரு சுங்கச்சாவடி உள்ளது.

இரண்டு சுங்கச்சாவடிகளும் அருகருகே இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் புதிதாக அமைக்கப்பட்ட சூரத்கல் சுங்கச்சாவடியை உடனே அகற்றும்படி பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே பல முறை போராட்டம் நடத்தப்பட்டுவிட்டது.

ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சுங்கச்சாவடியை காலி செய்வோம் என்றும், போராட்டம் நடத்துவதாகவும் கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

அதாவது காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் பிரதீபாகுலாய் தலைமையிலான 18 போ் குழு திட்டமிட்டிருந்ததாகவும், வருகிற 18-ந் தேதி சுங்கச்சாவடியை தகர்க்க இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இது மங்களூரு போலீசாரின் கவனத்திற்கு சென்றது.

18 பேருக்கு நோட்டீஸ்

அதன்படி மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், உடனே சூரத்கல் போலீசாரை அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து சூரத்கல் போலீசார் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் உள்பட 18 பேரும் இந்த போராட்டம் குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்.

மேலும் எந்தவிதமான வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட கூடாது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 18 பேரின் வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நோட்டீஸ் ஒவ்வொருவரின் வீடுகளிலும் ஒட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வருகிற 18-ந் தேதி அமைதியான முறையில் போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சூரத்கல் சுங்கச்சாவடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story