வேலை வாய்ப்பு தருவதாக தமிழகம் உள்பட 17 மாநில இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் முறைகேடு; முக்கிய குற்றவாளி பீகாரில் கைது

தமிழகம் உள்பட 17 மாநிலங்களை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த கும்பலின் முக்கிய குற்றவாளியை பீகாரில் கைது செய்துள்ளனர்.
பல கோடி சுருட்டல்
தமிழகம், கேரளா போன்ற தென்மாநிலங்கள் மட்டுமின்றி மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் என 17 மாநிலங்களை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து பெரும் மோசடி ஒன்று அரங்கேறியிருப்பதை ஒடிசாவின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அதாவது பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மர்ம கும்பல் ஒன்று அரசு இணையதளம் போல போலி இணையதளங்களை தொடங்கி அதன் மூலம் அரசு வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். மாவட்ட மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஒன்றிய சர்வேயர் போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இதற்காக விண்ணப்பித்த லட்சக்கணக்கான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்ப கட்டணம் என்ற பெயரிலேயே பல கோடிகளை சுருட்டியுள்ளனர்.
இடஒதுக்கீடு, கட்டண சலுகை
இதற்காக டெல்லி, மும்பை, போபால், டேராடூன் போன்ற நகரங்களில் பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களையும் அவர்கள் நடத்தி வந்துள்ளனர். அது மட்டுமின்றி வேலை வாய்ப்பு தருவதாக நடைபெறும் மோசடிகள் குறித்து தங்கள் இணையதளங்களில் இவர்களே எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.
இடஒதுக்கீடு, கட்டண சலுகை என அரசு விளம்பரம் போலவே விளம்பரங்கள் வெளியிடப்படுவதால் இளைஞர்களிடையே எந்த சந்தேகமும் எழவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு முதலே நடந்து வந்த இந்த முறைகேடு மூலம் பல கோடிகளை இந்த கும்பல் சுருட்டி உள்ளது. இது குறித்து விசாரித்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.
பீகாரை சேர்ந்தவர்
இந்த கும்பலை பிடிக்க களத்தில் இறங்கிய ஒடிசாவின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இதன் முக்கிய குற்றவாளி பீகாரை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர். அதன்பேரில் பீகாருக்கு விரைந்த அவர்கள் அங்குள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த தரம்பால் சிங் என்ற அந்த முக்கிய குற்றவாளியை கடந்த 15-ந் தேதி கைது செய்தனர்.
அவரை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், அவரை ஒடிசாவுக்கு கொண்டு சென்று விசாரிக்க அனுமதி கேட்டனர். இதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து தரம்பால் சிங்கை ஒடிசாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைவாய்ப்பு தருவதாக 17 மாநில இளைஞர்களிடம் பல கோடி சுருட்டிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.