மணிப்பூரில் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை; பாதுகாப்பு படையினருக்கு அமித்ஷா உத்தரவு


மணிப்பூரில் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை; பாதுகாப்பு படையினருக்கு அமித்ஷா உத்தரவு
x

மணிப்பூரில் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி பேரணி நடைபெற்றது.

இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது.

இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மணிப்பூர் சென்றுள்ளார். அங்கு வன்முறையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா பாதுகாப்பு படையினரின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக்கு பின் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம் குறித்து மணிப்பூர் போலீஸ், மத்திய ஆயுத போலீஸ்படை, இந்திய ராணுவ மூத்த அதிகாரிகளுடன் இம்பாலில் ஆலோசனை நடைபெற்றது. மணிப்பூரில் அமைதி, வளர்ச்சி எங்கள் முதல் முக்கியத்துவம், மணிப்பூரில் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என பதிவிட்டுள்ளார்.


Next Story