சிக்பள்ளாப்பூர் ஈஷா மையத்திற்கு எதிரான மனு தள்ளுபடி


சிக்பள்ளாப்பூர் ஈஷா மையத்திற்கு எதிரான மனு தள்ளுபடி
x

சிக்பள்ளாப்பூர் ஈஷா மையத்திற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:-

ஈஷா மையம்

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நந்திமலை அருகே ஈஷா அறக்கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆதியோகி சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த மையத்திற்கு எதிராக கா்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஈஷா மையம் நந்திமலை அருகில் அமைக்கப்பட்டுள்ளதால், அது நந்திமலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனால் அந்த மையத்திற்கு தடை விதிக்குமாறும் கோரப்பட்டது.

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஈஷா மையத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும், அங்கு புதிதாக கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் அந்த மனு மீது தலைமை நீதிபதி பி.பி.வராலே தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது.

பாதிப்பு கிடையாது

ஈஷா மையம் சார்பில் ஆஜரான வக்கீல், நந்திமலையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் ஈஷா மையம் அமைந்துள்ளதாகவும், அதனால் நந்திமலைக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும், இந்த பொதுநல மனு தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் வாதிட்டார்.

அப்போது நீதிபதி, மனுதாரர் உரிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றும், இத்தகைய வழக்குகளை தாக்கல் செய்யும் முன்பு சம்பந்தப்பட்ட மனுதாரர் தூய்மையானவராக இருக்க வேண்டும் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதைத்தொடர்ந்து அந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story