பி.எப்.ஐ. அமைப்பினருக்கு பயிற்சி அளிப்பதாக புகார்: சுதந்திர சமுதாய கூடத்தில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

பி.எப்.ஐ. அமைப்பினருக்கு பயிற்சி அளிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து சுதந்திர சமுதாய கூடத்தில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது. இதுதொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரு;
என்.ஐ.ஏ. சோதனை
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா மிட்டூரில் சுதந்திர சமுதாய கூடம் அமைந்துள்ளது. இந்த கூடத்தில் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. அதாவது பி.எப்.ஐ. அமைப்பினர் அதன் உறுப்பினர்களுக்கு பண்ட்வால், சுள்ளியா, புத்தூா் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த புகார்களின் பேரில் நேற்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சுதந்திர சமுதாய கூடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
2007-ம் ஆண்டு அறக்கட்டளையால் திறக்கப்பட்ட இந்த சுதந்திர சமுதாய கூடத்தில் மாநிலம் முழுவதும் இருந்து பல இளைஞர்கள் பயிற்சி பெற்று வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
நிர்வாகி கைது
இந்த சோதனையின்போது என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தெரிகிறது. இதையடுத்து அறக்கட்டளையின் நிர்வாகி அயூப் அங்கடியை கைது செய்தனர். முன்னதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வருவதை அறிந்ததும் மற்றொரு நிர்வாகி மசூத் அங்கடி தலைமறைவாகி விட்டார். அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடி வருகிறார்கள். மேலும் அந்த சுதந்திர சமுதாய கூடத்தை சீல் வைக்க உள்ளூர் போலீசாருக்கு என்.ஐ.ஏ. அறிவுறுத்தி உள்ளது.
பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக கடந்த மாதம் (செப்டம்பர்) 6-ந்தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் இதே சுதந்திர சமுதாய கூடத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.