வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் இயக்க திட்டம்


வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் இயக்க திட்டம்
x

வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து விரைவில் நடைமுறைப் படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.

வங்கி சேவைகள்

பணப் பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கி சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கி சேவையை பெற வேண்டும் என்றால் நீண்ட நேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது. மத்திய-மாநில அரசுளின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கிக்கணக்கு மிக முக்கியமானதாக ஆனது.

இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அதற்கு ஏற்றார் போல வங்கி சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காதிக பயன்பாட்டை குறைக்கும் வகையில் டிஜிட்டல் பரிமாற்றங்கள் தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 5 நாட்கள் செயல்படும்

என்னதான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுகவேண்டிய நிலை இன்றவும் இருக்கதான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாட வேண்டி உள்ளது. தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெறுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகி உள்ளது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான

ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நாட்களில் கூடுதல் நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர்கள் வருகை குறைவு

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதற்கு தற்போது எழுந்து உள்ள ஆதரவும், எதிர்ப்பும் பின்வருமாறு:-

உடுப்பியில் உள்ள இந்தியன் வங்கியின் மேலாளர் தீனதயாளன் கூறுகையில், "வங்கிகளுக்கு வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும். தற்போது எல்லாம் ஆன்லைன் பரிவர்த்தனை ஆகி விட்டது. முன்பு போல வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வருவது இல்லை. வாடிக்கையாளர்கள் வருகை குறைவாக உள்ளது. தற்போது அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளித்தால் மற்ற 5 நாட்கள் கூடுதலாக அரை மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டிய நிலை தான் உள்ளது. எனவே, வாரத்தில் 2 நாள் விடுமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.

வங்கி சேவையில் பாதிப்பு ஏற்படாது

சிவமொக்கா என்.டி.சாலையில் உள்ள பரோடா வங்கி மேலாளராக பணியாற்றி வரும் ரகுநந்தன் என்பவர் கூறுகையில், "மேற்கத்திய நாடுகளில் உள்ள வங்கிகளில் வாரத்திற்கு 5 நாள் வேலை திட்டம் தான் உள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் வேலை பார்ப்பதால் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளில் பாதிப்பு ஏற்படாது. ஏனென்றால் தொழில் அதிபர்கள் முதல் சிறு,குறு வியாபாரிகள் வரை ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர். அதேபோல் வங்கி அலுவல் பணிகளும் பாதிக்கப்படாது.

இந்த நாட்களுக்கு ஈடாக வேலை நாட்களில் கூடுதலாக சில மணி நேரம் வேலை பார்த்து சரிப்படுத்தி கொள்வோம். மேலும் மாதத்தில் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் வங்கிகளில் விடுமுறை இருப்பதால் அது தெரியாமல் சிலர் வந்து ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர். இனிமேல் வாரத்தில் 2 நாள் விடுமுறை வந்தால் மக்களுக்கு எந்த குழப்பமும் ஏற்படாது. எனவே, வங்கிகளில் வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை திட்டம் சரியானது தான்" என்றார்.

மைசூரு குவெம்பு நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஊழியர் பிரேம்குமார் கூறுகையில், "நாடு முழுவதும் தேசிய வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலைக்கு கோரிக்கை வைத்து உள்ளனர். இதுசம்பந்தமாக இந்தியன் பேங்க் ஆப் அசோசியேசன் ஆலோசனை நடத்துகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணம் வினியோகம் உள்பட சேவைகளுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. பண்டிகை காலங்களில் ஒரு வாரத்தில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி விடுமுறை வந்தாலும் வாடிக்கையாளர்கள் பாதிக்காத வகையில் அவர்களுக்கு தேவையான சேவைகள், வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் பணபரிமாற்றம் செயலி மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

அப்படி ஒருவேளை வங்கி அலுவல் வேலைகள் பாக்கி இருந்தால் அதனை மற்ற வேலை நாட்களில் கூடுதல் ஒரு மணிநேரம் பணியாற்றி முடித்து கொள்வோம்" என்றார்.

சேவை மனப்பான்மையுடன் பணி...

பெங்களூருவில் உள்ள கனரா வங்கி ஊழியர் புருஷோத்தம்தாஸ் கூறுகையில், " வங்கி ஊழியர்களுக்கு ஏற்கனவே தேவையான விடுமுறை கிடைக்கிறது. மாதத்தில் 2 வார சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதுதவிர அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை கிடைக்கிறது. இதனால் தற்போது வங்கி ஊழியர்களுக்கு கிடைக்கும் விடுமுறையை போதுமானது. மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் வங்கி ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்" என்றார்.

பணத்தட்டுப்பாடு ஏற்படும்

பெங்களூரு இந்திராநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்யும் விஜய் பிரபாகர் கூறுகையில், "வங்கிகளுக்கு சனி, ஞாயிறு விடுமுறை அளிப்பது எங்களுக்கு கஷ்டம் தான். மாத இறுதியில் சனி, ஞாயிறு விடுமுறை அளித்தால் காசோலை உள்ளிட்ட பரிவர்த்தனைகளை செய்வது சிரமம் ஆகிவிடும். காசோலை உள்ளிட்ட சில சேவைகளுக்கு நமக்கு வங்கி சேவை கண்டிப்பாக தேவைப்படுகிறது.

ஏற்கனவே வங்கிகளுக்கு மாதத்தில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை உள்ளது. அதுவே எங்களுக்கு கஷ்டமாக இருக்கும். வங்கிகளுக்கு

2 நாட்கள் விடுமுறை அளித்தால் எங்களின் வேலை தான் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். இதனால் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வங்கிகளை இயக்கும் முடிவை கைவிட வேண்டும்" என்றார்.

பரிவர்த்தனைகள் பாதிக்கும்

சிக்கமகளூரு மாவட்டம் மல்லந்தூரை சேர்ந்த காபி தோட்ட மேஸ்திரி குமார் கூறுகையில், "வங்கி ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்க வேண்டும் என்றும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் விடுமுறை விடவும் வலியுறுத்தி வருகிறார்கள். இவ்வாறு 2 நாள் விடுமுறை வழங்கும்பட்சத்தில் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை ஏதாவது ஒரு அரசு விடுமுறை வந்தால் தொடர்ந்து நிரந்தரமாக நான்கு நாட்கள் விடுமுறை விடப்படும். இதனால் பணப் பரிவர்த்தனை பாதிக்கப்படும்.

மேலும் காசோலைகள் மாற்றுவதில் சிக்கல் எழும். குறிப்பாக ஏ.டி.எம். மையங்களில் பணம் இருக்காது. கூலி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினை ஏற்படும். எனவே வங்கிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல. அதற்கு மாற்றுவழியை தேட வேண்டும்" என்றார்.

வங்கியில் கூட்டம் அலைமோதும்

கே.பி.அக்ரஹாராவில் காரம் மற்றும் இனிப்பு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தும் வடிவேலன் என்பவர் கூறுகையில், "வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டால் காசோலை உள்ளிட்ட பணபரிமாற்றங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். 2 நாட்கள் விடுமுறை முடிந்த பின்னர் வங்கிக்கு செல்லும் போது வங்கியில் கூட்டம் அலைமோதும். சாதாரண நாட்களிலேயே வங்கிக்கு சென்றால் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. வங்கி ஊழியர்களுக்கு ஏற்கனவே அதிகமாக அரசு விடுமுறைகள் உள்ளன. அவர்களுக்கு எதற்காக வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை யோசித்து பார்க்கலாம்" என்றார்.

ராஜாஜிநகரை சேர்ந்த தொழில் அதிபரான ஆர்.துரை என்பவர் கூறுகையில்:- "வங்கி ஊழியர்களுக்கு மாதத்தில் 2 சனிக்கிழமை விடுமுறை அளிப்பதே எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. வங்கி ஊழியர்களுக்கு நிறைய அரசு விடுமுறை வருகிறது. அவர்களுக்கு மாதத்தில் 2 சனிக்கிழமைகள் விடுமுறை கொடுக்க வேண்டாம் என்பதே எனது கருத்து. அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை கொடுத்தால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். காசோலையை மாற்றுவது உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆன்லைனில் ரூ.2 லட்சத்திற்கு மேல் பணத்தை பரிமாற்றம் செய்ய முடிவது இல்லை" என்றார்.


Next Story