உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் சாவு; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

சிருங்கேரியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த போலீஸ்காரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் ஜெகதீஷ் (வயது 29). இந்த நிலையில் அவர் கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியில் இருந்தபோது, ஜெகதீஷ் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து சக போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஜெகதீஷ் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சிவமொக்கா ஆஸ்பத்திரியில் இருந்து சிருங்கேரியில் உள்ள ஜெகதீசின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ஜெகதீசின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.