ஆன்லைன் நிதி நிறுவனம் பெயரில் தம்பதியிடம் ரூ.70 லட்சம் மோசடி

ஆன்லைன் நிதி நிறுவனம் என்ற பெயரில் கூடுதல் வட்டி தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோலார் தங்கவயல்:-
ஆன்லைன் நிதி நிறுவனம்
கோலார் தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை விவேக்நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி. இவரது மனைவி கீதா. சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி சுதாகர் ரெட்டியின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் அதிகளவு பணம் முதலீடு செய்யும் நபர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இதில் விருப்பம் இருந்தால் உங்கள் விவரங்களை அனுப்பும்படி கூறினர். இதற்கான செல்போன் செயலிக்கான இணைப்பு (லிங்க்) குறுந்தகவலில் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து கொண்டு, அந்த செயலியில் இருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் அனுப்பி வைக்கும்படி கூறினர். அதன்படி சுதாகர் ரெட்டி, செல்போன் செயலியில்அனைத்து விவரங்களையும் பதிவு செய்தார்.
ரூ.70 லட்சம் மோசடி
இதையடுத்து கிளாரா என்ற பெண் சுதாகர் ரெட்டி மற்றும் அவரது மனைவி கீதாவை செல்போனில் தொடர்பு கொண்டார். உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டது. நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை செல்போன் செயலி வாயிலாக எங்கள் நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தலாம். நீங்கள் பணம் செலுத்திய 6 மாதங்களில் வட்டி தொகை அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
இதையடுத்து வங்கி விவரங்களையும் அந்த பெண் வழங்கினார். இதை தம்பதி நம்பி அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணையாக ரூ. 70 லட்சம் வரை அனுப்பி வைத்தனர். பின்னர் பல மாதங்கள் காத்திருந்தனர். ஆனால் அந்த பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
மேலும் வங்கி கணக்கில் வட்டி தொகையும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தம்பதி, அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தார். அப்போது அந்த பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஏமாற்றம் அடைந்ததை அறிந்த தம்பதி இதுகுறித்து கோலார் தங்கவயல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.