ரோகிணி சிந்தூரி குறித்து பேச ரூபாவுக்கு 7-ந்தேதி வரை தடை; பெங்களூரு கோர்ட்டு அதிரடி உத்தரவு

ஐ.பி.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு எதிராக பேசுவதற்கு ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு வருகிற 7-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:
பெண் அதிகாரிகள் மோதல்
கர்நாடகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ரோகிணி சிந்தூரிக்கு எதிராக தனது முகநூல் பக்கத்தில் ரூபா 19 குற்றச்சாட்டுகளை கூறி இருந்ததுடன், ரோகிணி சிந்தூரியின் ரகசிய படங்களையும் வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, 2 பேரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன், அவர்கள் 2 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
அதே நேரத்தில் பத்திரிகைகள், சமூக வலைத்தளங்களில் 2 அதிகாரிகளும் எந்த விதமான கருத்துகளையும் தெரிவிக்க கூடாது என்று தலைமை செயலாளர் வந்திதா சர்மா உத்தரவிட்டு இருந்தார். அதையும் மீறி ரோகிணி சிந்தூரிக்கு எதிராக ரூபா அவதூறாக பேசியதுடன், சமூக வலைத்தளங்களிலும் கருத்துகளை பகிர்ந்து வந்தார். இதையடுத்து, தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிடவும், அவதூறாக பேசுவதற்கும் தடை விதிக்க கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் ரூபாவுக்கு எதிராக ரோகிணி சிந்தூரி வழக்கு தொடர்ந்தார்.
வருகிற 7-ந் தேதி வரை தடை
அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக இன்று (அதாவது நேற்று) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று நீதிபதி முன்னிலையில் ரோகிணி சிந்தூரி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது சார்பில் ஆஜரான வக்கீல், தனது மனுதாரருக்கு எதிராக சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகை, தொலைக்காட்சிகளிலும் ரூபா பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி வரை ரோகிணி சிந்தூரி குறித்து சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ரூபா பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் ரூபா உள்பட 60 பேரை எதிர் மனுதாரராக சேர்த்திருப்பதுடன், தடை உத்தரவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க வருகிற 7-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ரூபாவுக்கு நோட்டீஸ் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்காலிக முடிவு
பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு உத்தரவின் காரணமாக வருகிற 7-ந் தேதி வரை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஐ.பி.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி குறித்து எந்த ஒரு கருத்தையும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவால் தெரிவிக்க முடியாது.
கோர்ட்டு உத்தரவின் மூலம் 2 அதிகாரிகளுக்கு இடையே நடந்த மோதலுக்கு தற்காலிகமாக முடிவு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ்
கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை ரூபா கூறி இருந்தார். இதையடுத்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், அவதூறாக பேசி வரும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு, ரோகிணி சிந்தூரி தனது வக்கீல் நாகேஸ் மூலமாக நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறார். தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 24 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர போவதாகவும் வக்கீல் நோட்டீசில் ரோகிணி சிந்தூரி தெரிவித்திருந்தார். அதாவது வக்கீல் நோட்டீசு கிடைத்த 24 மணிநேரத்தில் ரூபா மன்னிப்பு கேட்கவில்லை எனில், மானநஷ்ட வழக்கு தொடர ரோகிணி சிந்தூரி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.