பணப்பிரச்சினை தீரும் என்று கூறி சிறுவனை நிர்வாணப்படுத்தி பூஜை;3 பேர் கைது


பணப்பிரச்சினை தீரும் என்று கூறி  சிறுவனை நிர்வாணப்படுத்தி பூஜை;3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பணப்பிரச்சினை தீரும் என்று கூறி சிறுவனை நிர்வாணப்படுத்தி பூஜை செய்து அதை வீடியோ எடுத்து வெளியிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கொப்பல்:

நிர்வாணப்படுத்தி பூஜை

கொப்பல் அருகே ஹசகல் கிராமத்தில் 15 வயது சிறுவன் வசித்து வருகிறான். அந்த சிறுவனின் தந்தை கிராமத்தை சேர்ந்த சரணப்பா நிங்கப்பா தல்வார், விருபனகவுடா, சரணப்பா போஜப்பா ஆகியோரிடம் இருந்து கடன் வாங்கி இருந்தார். ஆனால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் 3 பேரும் சேர்ந்து கடனை திரும்ப தரும்படி கேட்டு சிறுவனின் தந்தைக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுவனின் தந்தையிடம் 3 பேரும் சேர்ந்து உனது மகனை நிர்வாணப்படுத்தி பூஜை செய்தால் பணப்பிரச்சினை தீரும் என்றும், தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்து விடலாம் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் இதற்கு சிறுவனின் தந்தை மறுத்து உள்ளார். ஆனாலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுவனை உப்பள்ளிக்கு அழைத்து சென்ற 3 பேரும், ஒரு ஓட்டலில் வைத்து பணப்பிரச்சினை தீரும் என்று கூறி சிறுவனை நிர்வாணப்படுத்தி பூஜை செய்து உள்ளனர். பின்னர் இதனை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வீடியோ

சம்பவம் குறித்து சிறுவன் வெளியே கூறாமல் இருந்து வந்து உள்ளான். இந்த நிலையில் சிறுவனை நிர்வாணப்படுத்தி பூஜை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவை பார்த்து சிறுவனும், அவனது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் கொப்பல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிங்கப்பா, விருபனகவுடா, சரணப்பா ஆகியோரை கைது செய்தனர்.

கைதான 3 பேர் மீதும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கொப்பல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story