தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார் .
பன்னரகட்டா:
கேரள மாணவர்
பெங்களூரு புறநகர் மாவட்டம் பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த நிதின் (வயது 19) என்பவர் படித்து வந்தார். கடந்த 1-ந் தேதி தான் நிதின் கல்லூரியில் சேர்ந்திருந்தார். கல்லூரி வளாகத்திலேயே இருக்கும் விடுதியில்
மாணவர் நிதின் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு சென்ற நிதின் கதவை பூட்டி கொண்டதாக தெரிகிறது. அதன்பிறகு, அவர் வெளியே வரவில்லை. பின்னர் விடுதி ஊழியர் கதவை திறக்கும்படி பலமுறை நிதினிடம் கூறியும், அவர் திறக்கவில்லை. இதுபற்றி அந்த ஊழியர், விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தார். விடுதி வார்டன் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்...
அப்போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாணவர் நிதின் பிணமாக கிடந்தார். இதை பார்த்து விடுதி வார்டன், ஊழியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பன்னரகட்டா போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள். கடந்த 2 வாரத்திற்கு முன்பு தான் கல்லூரியில் அவர் சேர்ந்திருந்தார். கதவு பூட்டி கிடந்ததால், அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
அதே நேரத்தில் வேறு யாரும் நிதினை கொலை செய்துவிட்டு அறையை பூட்டி சென்றனரா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.