கண்ணூர் மடத்திற்கு அழைத்து சென்று மடாதிபதியிடம் விசாரணை
மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை வழக்கு தொடர்பாக, மடாதிபதி மிருதனஞ்ஜெய சுவாமியை கண்ணூர் மடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
ராமநகர்:-
மடாதிபதி கைது
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா கஞ்சிகல் கிராமத்தில் பண்டே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த பசவலிங்க சுவாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாகடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மடாதிபதி பசவலிங்க சுவாமியை ஹனிடிராப் முறையில் மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக, கண்ணூர் மடத்தின் மடாதிபதியும், பசவலிங்க சுவாமியின் சகோதரருமான மிருதனஞ்ஜெய சுவாமி, பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டப்பள்ளாப்புராவை சேர்ந்த கல்லூரி மாணவி நீலாம்பிகா, வக்கீலான மகாதேவய்யா ஆகிய 3 பேரை மாகடி போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களை 6 நாட்கள் தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மடத்திற்கு அழைத்து சென்று விசாரணை
இந்த நிலையில் மடாதிபதி மிருதனஞ்ஜெய சுவாமியிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, மடாதிபதி பசவலிங்க சுவாமியை ஹனிடிராப் முறையில் மிரட்டியது தவறு தான் என்று ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் வேறு மடாதிபதிகளை ஹனிடிராப் முறையில் மிரட்டுவதற்காக வீடியோ எதுவும் எடுக்கவில்லை என்றும் மிருதனஞ்ஜெய சுவாமி கூறியுள்ளார். மடாதிபதி பசவலிங்க சுவாமியை ஹனிடிராப் முறையில் மிரட்டுவதற்காக கண்ணூர் மடத்தில் வைத்து தான் திட்டம் தீட்டப்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதனால் நேற்று மதியம் மடாதிபதி மிருதனஞ்ஜெய சுவாமியை கண்ணூர் மடத்திற்கு அழைத்து சென்று மாகடி போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். பின்னர் அவரை அழைத்து சென்றனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கைதான நீலாம்பிகாவுக்கு, தகவல் தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரிந்து இருந்ததால் அவர் செல்போன்களில் உள்ள தகவல்களை அழித்ததும் தெரியவந்து உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.