தொழில்நுட்ப கோளாறால் மங்களூரு விமான நிலையத்தில்2½ மணி நேரம் விமானங்கள் சேவை பாதிப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மங்களூரு விமான நிலையத்தில் 2½ மணி நேரம் விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.
மங்களூரு-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக மங்களூரு விமான நிலையத்தில் 2½ மணி நேரம் விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.
மங்களூரு விமான நிலையம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்களூரு விமான நிலையத்தில் சுமார் 2.½ மணி நேரம் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று தெரியவந்துள்ளது. இதன்காரணமாக பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
இதுபற்றி மங்களூரு விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருப்பி விடப்பட்டது
மங்களூரு விமான நிலையத்தில் நேற்று(நேற்று முன்தினம்) இரவு 7 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதாவது ஓடுபாதையின் இருபுறங்களிலும் மின்விளக்குகளை ஒளிரச் செய்யும் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக மங்களூரு விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மங்களூருவில் இருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் மங்களூருவுக்கு வருகை தரும் விமானங்கள் என அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டன.
மும்பையில் இருந்து மங்களூருவுக்கு வந்த இன்டிகோ விமானம் கண்ணூர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அதுபோல் சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து வந்த விமானங்களும் தாமதமாக வரவழைக்கப்பட்டன.
பயணிகள் சிரமம் அடைந்தனர்
மங்களூருவில் இருந்து பக்ரைனுக்கு இரவு 8.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இரவு 9.30 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது. அதன்பின்னர் பக்ரைன் விமானம் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
இதன்காரணமாக பயணிகள் சிரமம் அடைந்தனர். இருப்பினும் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் விமான நிலையம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.