சக்லேஷ்புரா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ

சக்லேஷ்புரா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வன காவலர்கள் 4 பேர் தீயில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.
ஹாசன்:-
வனப்பகுதியில் காட்டுத்தீ
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் வனப்பகுதி நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் மாரனஹள்ளி அருகே உள்ள இத்திகேகூடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென்று காாட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென வனப்பகுதியில் இருந்த புற்கள், மரங்கள், செடி-கொடிகளுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனக்காவலர்கள் 6 பேர் விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை.
4 பேர் படுகாயம்
இதற்கிடையே காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வனக்காவலர்கள் மஞ்சுநாத், சுந்தரேஷ், மகேஷ், துங்கேஷ் ஆகிய 4 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 2 பேரும் உடனடியாக 4 பேரையும் மீட்டனர். மேலும் அவர்கள் உடலில் பிடித்த தீயையும் அணைத்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்த 4 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காடுமனே கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் வெயிலால்...
இதையடுத்து இத்திகேகூடு வனப்பகுதிக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், அதற்குள் ஏராளமான மரங்கள், செடி-கொடிகள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் வனவிலங்குகள் ஏதாவது சிக்கி உயிரிழந்ததா? என்பது தெரியவில்லை.
சக்லேஷ்புரா வனப்பகுதியில் கடந்்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.