252 நாட்களுக்கு பிறகு போராட்டத்தை கைவிட்ட மடாதிபதி
252 நாட்களுக்கு பிறகு போராட்டத்தை கைவிட்ட மடாதிபதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. இந்த இடஒதுக்கீடு வால்மீகி சமூகத்திற்கும் பொருந்தும். முன்னதாக வால்மீகி சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூரு சுதந்திர பூங்காவில் அந்த சமூகத்தை சேர்ந்த வால்மீகி குரு பீடத்தின் பிரசன்னந்தபுரி மடாதிபதி 252 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். கடந்த வாரம் மந்திரிசபை கூட்டத்தில் இடஒதுக்கீட்டுக்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும் மடாதிபதி தனது போராட்டத்தை கைவிடவில்லை.
இதுதொடர்பாக அரசாணை வெளியிட்டால் மட்டுமே தனது போராட்டத்தை கைவிடுவதாக அவர் அறிவித்திருந்தார். தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டதுடன், அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மடாதிபதி பிரசன்னந்தபுரி தொடர்ந்து 252 நாட்கள் நடத்தி வந்த போராட்டத்தை கைவிட்டுள்ளார். இதற்கு முன்பு இருந்த முதல்-மந்திரிகள் வால்மீகி சமுதாயத்தை புறக்கணித்து வந்தனர். பசவராஜ் பொம்மை இடஒதுக்கீடு வழங்கி புதிய வரலாறு படைத்துள்ளார் என்று மடாதிபதி தெரிவித்தார்.