சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கு: விசாரணை அறிக்கையை போலீசார் ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் விசாரணை அறிக்கையை போலீசார் ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் போலீஸ் துறையில் 545 சப்-இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக எழுத்து தேர்வும் நடத்தப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது போலீஸ் துறையில் ஆள்சேர்ப்பு பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த அம்ருத்பால் உள்பட ஏராளமான அதிகாரிகள், கட்சி பிரமுகர்களிடம் ரூ.80 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் முறைகேடு செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இதுபற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இதுதொடர்பான வழக்கும் கர்நாடக ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுவரையில் சி.ஐ.டி. போலீசார் இவ்வழக்கில் மேற்கொண்ட விசாரணையையும், அதற்கான ஆவணங்களையும் கோர்ட்டில் இன்னும் ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். குறிப்பாக கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் கைது செய்யப்பட்டதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் இவ்வழக்கின் விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இது கர்நாடக போலீஸ் துறையில் மேலும் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.