மதம் சார்ந்த கொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் சபாநாயகர் யு.டி.காதரிடம் கோரிக்கை
தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த மதம் சார்ந்த கொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என சபாநாயகர் யு.டி.காதரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த மதம் சார்ந்த கொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என சபாநாயகர் யு.டி.காதரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடத்த கோரிக்கை
தட்சிண கன்னடா மாவட்டத்தில் மதம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக அடிக்கடி கொலைகள் நடந்து வருகின்றன. இதில் மங்களூருவை சேர்ந்த பிரவீன் நெட்டார், பெல்லாரே பகுதியைச் சேர்ந்த மசூத், சூரத்கல்லைச் சேர்ந்த பாசில் ஆகியோர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் மசூத்தின் தாயார் சாரம்மா சபாநாயகர் யு.டி.காதரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில், எனது மகன் மசூத் மற்றும் பாசில் கொலை வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் பாகுபாடு காட்ட கூடாது.
கொலை வழக்குகளின் விசாரணை மற்றும் இழப்பீடு வழங்குவதில் பா.ஜனதா அரசு பாரபட்சம் காட்டியது. அதுபோல் இல்லாமல் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழப்பீடு வழங்க வேண்டும்
பா.ஜனதா அரசு பிரவீன் நெட்டாரின் குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மேலும் பிரவீன் நெட்டாரின் மனைவிக்கு அரசு வேலை கொடுத்துள்ளது. அதுபோல் காங்கிரஸ் கட்சி எங்களுக்கும், பாசில் குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எங்கள் (மசூத்) குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை, முதல்-மந்திரி சித்தராமையா வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மதம் சார்ந்த கொலைகள் அடிக்கடி நடப்பதால் இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கூறியுள்ளார்.