காங்கிரசுக்கு வாக்களிப்பது பி.எப்.ஐ. அமைப்புக்கு வாக்களிப்பதற்கு சமம் உடுப்பியில் ஜே.பி.நட்டா பேச்சு


காங்கிரசுக்கு வாக்களிப்பது பி.எப்.ஐ. அமைப்புக்கு  வாக்களிப்பதற்கு சமம் உடுப்பியில் ஜே.பி.நட்டா பேச்சு
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது பி.எப்.ஐ. அமைப்புக்கு வாக்களிப்பதற்கு சமம் ஆகும் என ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

மங்களூரு-

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது பி.எப்.ஐ. அமைப்புக்கு வாக்களிப்பதற்கு சமம் ஆகும் என ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தல்

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. இதையொட்டி பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றன. இந்தநிலையில் பா.ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உடுப்பிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். அவருக்கு பா.ஜனதா கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜே.பி.நட்டா சாலி கிராமத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு (பி.எப்.ஐ.) வாக்களிப்பதற்கு சமம் ஆகும். ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு வாக்களித்தால் அது காங்கிரசுக்கு வாக்களித்தது போன்றது. ஏனென்றால் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சி மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளனர். இவை அனைத்தும் சமூகத்தில் வன்முறையை ஏற்படுத்தும் சமூக விரோதிகளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள். மக்கள் வாக்களிக்கும்போது இதை மனதில் கொள்ள வேண்டும்.

பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, பி.எப்.ஐ. மீது பதிவு செய்யபட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு, கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. இப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?. சமுதாயத்தில் அமைதி வேண்டாமா?. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதித்தனர். மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் சிறையில் இருக்க வேண்டுமென்றால், நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது தொடர் ஊழல்கள் நடந்தன. மல்லபிரபா கால்வாய் அமைப்பதில் ஊழல், போலீஸ் ஆட்சேர்ப்பு, ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும் பெங்களூரு அர்க்காவதி லே-அவுட் மேம்பாட்டில் ரூ.8,000 கோடி அளவுக்கு பெரிய ஊழல் நடந்துள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியின் போது ஊழல் ஒன்றை காட்டுங்கள். மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு உள்ளது. அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். ஊழல் பற்றி பேச காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. ஊழலற்ற ஆட்சியை உருவாக்க மக்கள் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.

இரட்டை என்ஜின் ஆட்சி

இரட்டை என்ஜின் ஆட்சி வேண்டுமென்றால், பா.ஜ.க. வேட்பாளரை மக்கள் வெற்றி பெற செய்து சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 4 சதவீதமும், லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமூகத்தினருக்கு 4 சதவீதமும் இடஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளோம். சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும், இந்த இடஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, வகுப்புவாத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறுகிறார்கள், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. யாருடைய இடஒதுக்கீட்டை அவர்கள் திரும்ப பெற விரும்புகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியினர் கூற வேண்டும். அரசியலின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துவதற்காக மட்டுமே அவர்கள் வேலை செய்கிறார்கள்.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.


Next Story