கர்நாடகத்தில் பா.ஜனதா அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம்-காங்.மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மங்களூரு, சிவமொக்கா சம்பவங்களே இதற்கு சாட்சி. நாட்டிலேயே பசவராஜ் பொம்மை ஒரு திறனற்ற முதல்-மந்திரியாக திகழ்கிறார். அவர் 40 சதவீத கமிஷன் அரசின் முதல்-மந்திரி ஆவார். மக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்கிறது. சமுதாயத்தை பிளவுபடுத்தும் பா.ஜனதாவுக்கு எதிராக எங்கள் கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக போராட உறுதிபூண்டுள்ளோம். இந்த பா.ஜனதா அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.
சட்டத்துறை மந்திரியே, இந்த அரசு செயல்படவில்லை என்று கூறியுள்ளார். ஒரு மந்திரி இன்னொரு மந்திரியை குறை சொல்கிறார். சக மந்திரி மீது ஒரு மந்திரியே குறை சொல்லும்போது, அரசின் நிலை என்ன?. இத்தகைய அரசு நீடிக்க வேண்டுமா?.
இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.