தமிழ் பட உலகின் முதல் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி


தமிழ் பட உலகின் முதல் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி
x

1939-ல் பதினேழு வயது இளம்புயலாக தமிழ் திரை உலகில் நுழைந்தார், டி.ஆர்.ராஜகுமாரி. ‘ஹரிதாஸ்’ வெளியாகி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது.

தமிழ் சினிமாவில் 1931 முதல் பேசும் படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதை தமிழ் சினிமா என்று சொல்வதை விட, தென்னிந்திய சினிமா என்றே சொல்லவேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய எல்லா மொழி திரைப்படங்களும் சென்னையை மையமாகக் கொண்டே தயாரிக்கப்பட்டன. ஆகவே ஒரே நடிகர்கள் பல்வேறு மொழிகளில் நடிப்பது சர்வ சாதாரணமாக இருந்த காலகட்டம் அது. 1939-ல் பதினேழு வயது இளம்புயலாக தமிழ் திரை உலகில் நுழைந்தார், டி.ஆர்.ராஜகுமாரி.

திரைப்படத்தின் பெயர் 'குமார குலோத்துங்கன்.' ஒரு நடிகைக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருந்தது. மயக்கும் விழிகள், அபார உடலமைப்பு, வசீகரமான குரல், நடனத் திறமை என்று பல்வேறு திறமைகளை ஒருங்கே பெற்றவர். முதல் படம் சுமாராக போனாலும், அடுத்த படமான 'கச்ச தேவயானி' ஹிட் ஆகி, அவரது வெற்றிப்பயணம் தொடங்கியது. 1944-ல் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஹரிதாஸ்' வெளியாகி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. 1944-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான இந்தப்படம், 1946 தீபாவளி வரை ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்‌.கே.தியாகராஜ பாகவதருடன் நடித்த ராஜகுமாரி, கவர்ச்சியில் தாராளமாகவே நடித்திருந்தார். ஒரு மசாலா படத்துக்கு கவர்ச்சி மிக முக்கியம் என்ற இலக்கணத்தை முதலில் தொடங்கி வைத்தது அநேகமாக இந்தப் படமாகத்தான் இருக்கும். படத்தின் முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள்தான்.

மிகவும் நெருக்கமான காட்சிகள் அதிகம். உடை விஷயத்திலும் சரி, நடிப்பு விஷயத்திலும் சரி டி‌.ஆர். ராஜகுமாரி மிகவும் தாராளமாக நடித்திருப்பார். அந்த காலகட்டத்தில் யாருமே நினைத்து பார்க்க முடியாத செயல் இது. 1948-ல் அதை விட பிரமாண்டமான படமான 'சந்திரலேகா' வெளிவர, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆனார், டி.ஆர்.ராஜகுமாரி.

1950-களில் திரையுலகை தன் முழு பிடியில் கொண்டு வந்து விட்டார். அடுத்த தலைமுறை நடிகர்களில் முன்னேறிக் கொண்டிருந்த, எம்‌.ஜி‌.ஆர், சிவாஜி கணேசன் இருவரோடும் ஜோடி சேர்ந்தார். முத்தாய்ப்பாக 'மனோகரா' படத்தில் சிவாஜி கணேசனுக்கு சித்தியாகவும் நடித்திருப்பார். மனோகராவின் தந்தையை மயக்கி அவரது ஆசை நாயகியாகி ஆட்சியை கைப்பற்றும் வேடத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் முதன் முதலில் கவர்ச்சி வில்லி ஆனவரும் இவர்தான். முதல் கனவுக்கன்னியும் இவர்தான். ஒரே காலகட்டத்தில் கதா நாயகி, வில்லி, குணச்சித்திரம் என்று பல வேடங் களில் கலக்கினார்.

ஆர்‌.ஆர். பிக்சர்ஸ் என்ற பெயரில் சொந்தமாக திரைப்படக் கம்பெனி தொடங்கி, தன் சகோதரர் டி.ஆர். ராமண்ணா இயக்க நிறைய படங்களை எடுத்தார். எம்‌.ஜி‌.ஆர், சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி' படத்தை தயாரித்தவர் இவரே. எம்.‌ஜி.‌ஆரின் மாஸ் ஹிட் படமான 'குலேபகாவலி'யை தயாரித்தவரும் இவர்தான். அதே போல தியாகராயநகரில் தியேட்டர் ஒன்றை கட்டி, திரைப்பட நடிகைகளில் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை என்ற பெயரும் பெற்றார். தமிழ், தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழிகளிலும் நடித்து வந்தவர். 1963-ம் ஆண்டோடு நடிப்புக்கு முழுக்கு போட்டார். கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்த அவர், 1999-ம் ஆண்டு மறைந்தார். இன்று ஒரு பிடி மண் வாங்குவதற்கும் கோடி ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும் சென்னையின், அதிக விலை மதிப்பு மிகுந்த டி.நகரில், முதல் பங்களா கட்டி 'கன்யாகுமரி பவனம்' என பெயரிட்டார்.

இவரது கடைக்கண் பார்வைக்கும், இதழ் விரித்துச் சுளிக்கும் சிரிப்புக்கும் கோடானு கோடி ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். பெயருக்கேற்றார்போல் இன்று வரையிலும் திரையுலகின் ராஜகுமாரி இவர் மட்டுமே.


Next Story