ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆர்.டி.ஓ. ஆய்வு


ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆர்.டி.ஓ. ஆய்வு
x

பள்ளிக்கூட வாகனங்களை ஆர்.டி.ஓ. ஆய்வு

ஈரோடு

ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் ஆய்வு செய்தார்.

பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு வருகிற 13-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகளுக்காக இயக்கப்படும் பஸ், வேன் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களின் மூலம் இயக்கப்படும் வாகனங்கள், ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள ஏ.இ.டி. பள்ளிக்கூட மைதானத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

கண்காணிப்பு கேமரா

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பதுவைநாதன் (மேற்கு), வெங்கட்ரமணி (கிழக்கு), சக்திவேல் (பெருந்துறை) ஆகியோர் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதனை ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 355 வாகனங்கள், ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 43 வாகனங்கள், பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 463 வாகனங்கள் என மொத்தம் 861 பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பள்ளிக்கூட வாகனங்களில் அரசு அறிவித்துள்ள மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதா?, வாகனங்களின் இருபுறத்தில் குறிப்பிட்ட அளவுகளில் பள்ளிக்கூடத்தின் பெயர், நிர்வாகத்தின் தொடர்பு எண், வட்டார போக்குவரத்து அலுவலர், போலீஸ் நிலையம் தொடர்பு எண்கள் உள்ளனவா?, அவசர கால வழி அரசு வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளதா?, வாகனத்தில் முதல் உதவிப்பெட்டிகள், 2 தீயணைப்பான் கருவிகள் உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை இயங்கும் நிலையில் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

அனுமதி சான்றிதழ்

மேலும், பள்ளிக்கூட வாகனங்களில் உதவியாளர், நடத்துனர் சான்றிதழ் பெற்றுள்ளனரா? எனவும் ஆய்வு மேற்கொண்டு, இவைகளை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க அதிகாரிகள் அனுமதி சான்றிதழ் வழங்கினர். சில பள்ளிக்கூட வாகனங்களில் குறிப்பிட்ட சில குறைபாடுகள் இருந்தது. அதனை சரி செய்த பின், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனத்தை காண்பித்து சான்றிதழ் வாங்கி கொள்ளுமாறும் சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடத்தின் ஓட்டுனருக்கு அறிவுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் விபத்தில்லா பயணத்தினை மேற்கொள்ள டிரைவர்கள் கவனக்குறைவில்லாமல் தங்களது வாகனங்களை இயக்க வேண்டும். நகர்ப்புறத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும், புறநகர் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளிக்கூட வாகனங்களில் வரும் குழந்தைகளை தங்கள் குழைந்தகள் போல நினைத்து, அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல உறுதி ஏற்க வேண்டும் என டிரைவர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

விழிப்புணர்வு

முன்னதாக பெருந்துறை தீயணைப்பு நிலையம் சார்பில், வாகனங்களில் தீ பிடித்தால் தீயணைப்பான் கருவியை பயன்படுத்தி எப்படி தீயை அணைப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பள்ளிக்கூட வாகனங்களை டிரான்ஸ்பார்மர் அருகில் நிறுத்தக்கூடாது எனவும், வாகனத்தில் தீ பிடித்தால் உடனடியாக பேட்டரியில் இருந்து வரும் மின் இணைப்பினை துண்டிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பிரகாஷ், பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன், உதவி அலுவலர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story