6 ரத்த சுத்திகரிப்பு எந்திரங்கள்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 ரத்த சுத்திகரிப்பு எந்திரங்களை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 ரத்த சுத்திகரிப்பு எந்திரங்களை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
ரத்த சுத்திகரிப்பு எந்திரம்
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டத்தின் மூலமாக ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வழங்கப்பட்ட 6 ரத்த சுத்திகரிப்பு எந்திரங்களை (டயாலிசிஸ்) பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் வரவேற்று பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு ரத்த சுத்திகரிப்பு எந்திரங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து பேசியதாவது:-
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 6 ரத்த சுத்திகரிப்பு எந்திரங்கள் உள்ளன. தற்பொழுது கூடுதலாக 6 எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவ கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. இங்கு நூறு மாணவர்கள் மட்டுமே படிக்கும் வசதி இருந்தது.
மாணவர்கள் எண்ணிக்கை
தற்போது இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் 6 துறைகளில் 26 பட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு முதலாம் ஆண்டில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். தற்பொழுது இங்கு ஏற்கனவே 1,368 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 200 படுக்கைகள் கொண்ட கட்டிடம் விரைவில் கட்டப்பட உள்ளது. இதற்கான அரசு அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
இதுபோல இங்கு நரம்பியல் துறையில் உயர் மருத்துவர்கள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தில் இந்த மருத்துவமனை பி தர வரிசையில் உள்ளது. விரைவில் இதை ஏ தரவரிசைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சிவகங்கை நகரசபை தலைவர் துரை ஆனந்த், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், நகரசபை துணைத்தலைவர் கார்கண்ணன், உதவி மருத்துவ அலுவலர்கள் முகமது ரபிக், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.