வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கற்பழிப்பு
பெரம்பலூர் மதரஸா ரோட்டை சேர்ந்தவர் கமல்பாஷா. இவரது மகன் சல்மான் (வயது 28). இவர் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, தன்னை விட 2 வயது மூத்த பட்டதாரி பெண்ணை காதலிப்பதாக கூறி, அவரிடம் பழகி வந்துள்ளார்.
அப்போது அவர் தனது தந்தையின் இனிப்பு கடை சேமிப்பு கிடங்கில் வைத்து அந்த பெண்ணை கற்பழித்துள்ளார். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மிரட்டியும், திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறியும் அந்த பெண்ணை சல்மான் பலமுறை கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது.
தீர்ப்பு
இதில் அந்த பெண் 2 முறை கர்ப்பம் தரித்தாகவும், அதனை சல்மான் கலைத்ததாகவும், இதற்கிடையே சல்மான் அந்த பெண்ணின் கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் 3-வது முறையாக அந்த பெண் கர்ப்பமடைந்தார். இந்நிலையில் தற்போது அந்த பெண்ணுக்கு 7 வயதில் மகன் உள்ளான். ஆனால் அந்த பெண்ணை சல்மான் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார்.
இது தொடர்பாக அந்த பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சல்மான் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு பெரம்பலூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இரவு இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. மகிளா கோர்ட்டு அமர்வு நீதிபதி முத்துகுமரவேல் தீர்ப்பு கூறினார்.
10 ஆண்டுகள் சிறை தண்டனை
அவர் தனது தீர்ப்பில், பெண்ணை கற்பழித்த வழக்கில் சல்மானுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுந்தரராஜன் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து சல்மானை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்றனர்.