திண்டுக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1௦௦௦; அமைச்சர்கள் வழங்கினர்.


திண்டுக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1௦௦௦; அமைச்சர்கள் வழங்கினர்.
x

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.

புதுமைப்பெண் திட்டம்

புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு 304 மாணவிகளுக்கு ரூ.1,000-த்தை வங்கி மூலம் எடுக்கும் வகையில் ஏ.டி.எம். கார்டுகள், உயர்கல்வி-வேலைவாய்ப்பு மலர் ஆகியவற்றை வழங்கி பேசினர்.

ரூ.37 ஆயிரம் கோடி நிதி

அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்காக 2022-23 நிதியாண்டில் மட்டும் ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். தற்போது உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் நலனுக்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் என்றார்.

அதையடுத்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,390 மாணவிகளுக்கு முதல் கட்டமாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. மாணவிகளுக்கு உயர்கல்வி அளிப்பதால் குழந்தை திருமணத்தை தடுக்க முடியும். வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவிகள் பலன் அடைவார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் புஷ்பகலா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பொன்ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம், ஜி.டி.என். கல்வி குழும செயலாளர் ரெத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story