தமிழகத்தின் அடையாளமாக 108 ஆம்புலன்ஸ் திட்டம் - மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

தமிழகத்தின் அடையாளமாக 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளது என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழகத்தின் அடையாளமாக 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளது என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மாநில மாநாடு
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில மாநாடு மதுரை உலக தமிழ் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி தலைமை தாங்கினார். மாநில தலைவர் உலகநாதன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
2008-ம் ஆண்டு 200 வாகனங்களோடு தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் தற்போது 1,353 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 205 ஆம்புலன்ஸ்கள் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளோடு உள்ளன. இதில் 65 குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்கள் உள்ளன.
தமிழக அரசு பொறுப்பேற்ற ஓராண்டில், ரூ.102 கோடியே 28 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் 293 ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளமாக 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை பின்பற்றுகின்றன. நாளொன்றுக்கு 12,500 தொலைபேசி அழைப்புகள் 108 எண்ணிற்கு வருகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் பெற்றனர். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு சங்கத்தின் சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
மதுரை விமான நிலையம்
இதனை தொடர்ந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் 2300-க்கும் மேற்பட்டோர் வேலை முடிந்து திரும்பி அனுப்பப்பட்ட போது மீண்டும் அவர்களுக்கு ஆங்காங்கே குறைந்த சம்பளத்தில் வேலை கொடுப்போம் என்று கூறி இருந்தோம். அதன்படி, 32 மாவட்டங்களிலும் அனைவரும் வேலைக்கு சேர்ந்து விட்டனர். கொரோனா தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், 5½ லட்சம் தடுப்பூசிகள் தற்போது கையிருப்பு உள்ளது. மேலும் மத்திய அரசிடம் கூடுதலாக கேட்டு கடிதம் எழுதி இருக்கிறோம். தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வைரசால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 4,5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும்.
நீட் தேர்வு
நீட் தேர்வுக்கான நிரந்தர தீர்வு ஜனாதிபதி கையில்தான் உள்ளது. அவர்தான் சுகாதாரத்துறைக்கும், கல்வித்துறைக்கும் அதை அனுப்பி விளக்கம் கேட்டு 3 முறை விளக்கம் கொடுத்துள்ளோம். ஜனாதிபதி தான் நீட் தேர்வுக்கு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.