எடப்பாடியில் ரூ.1.18 கோடி புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

எடப்பாடியில் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம்,
புகையிலை பொருட்கள்
தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டு உள்ளது. சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், ஓமலூர் வட்டார அலுவலர் ரவி, எடப்பாடி வட்டார அலுவலர் குமரகுரு மற்றும் அதிகாரிகள் ஓமலூரில் உள்ள டீக்கடை, மளிகை கடை உள்ளிட்ட பல கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
ரூ.1.18 கோடி
பின்னர் புகையிலை பொருட்கள் அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று விசாரணை நடத்தினர். இதில் எடப்பாடி பகுதியில் உள்ள ஒருவரிடம் புகையிலை பொருட்கள் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து எடப்பாடி பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்டவரது வீடு மற்றும் குடோனில் சோதனை நடத்தினர்.
அப்போது குடோனில் மூட்டைகளிலும், பொட்டலமாகவும் மொத்தம் 29 டன் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:-
எடப்பாடி செட்டிமாங்குறிச்சி ஒட்டப்பட்டியை சேர்ந்த சுப்ரமணி (வயது 75) என்பவருக்கு சொந்தமான குடோனில் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் 29 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து உள்ளோம். இதன் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆய்வு அறிக்கையின் முடிவுபடி சம்பந்தப்பட்டவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பரிந்துரை
மேலும் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட இடத்திலேயே கடந்த 2 மாதத்திற்கு முன்பு 885 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அதில் இருந்து மாதிரி எடுத்து சோதனை நடத்தியதில் அவைகள் பாதுகாப்பற்றதாகவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்டது என்றும் உறுதிபடுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து குடோன் உரிமையாளர் சுப்ரமணி மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தற்போது மீண்டும் இதே குடோனில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதால் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு ஆணையாளரிடம் பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.