16 குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

16 குளங்களுக்கு தண்ணீர் வரும் பிரதான கால்வாய்களை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.
பிரதான கால்வாய்
திண்டுக்கல் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டது. இதற்காக அணைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. அந்த வகையில் தருமத்துப்பட்டியில் மலையடிவாரத்தில் சின்ன கோம்பையாறு அணை அமைந்துள்ளது. பருவமழை பொழிந்து கோம்பையாறு அணை நிரம்பியதும், அதில் இருந்து பல குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.
அதன்படி கோம்பையாறு அணையில் இருந்து கன்னிவாடி பகுதியில் அமைந்துள்ள கதிரையன்குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. அந்த குளம் நிரம்பியதும் ஷட்டர் மூலம் பிற குளங்களுக்கு பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த கால்வாய் சுமார் 2 கி.மீ. தூரம் சென்றதும் 2 ஆக பிரிந்து சிந்தலக்குண்டு மற்றும் கசவனம்பட்டி பகுதிகளில் இருக்கும் குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.
புதர் மண்டிய காட்சி
அதில் ஒரு கால்வாய் மூலம் சிந்தலக்குண்டு பகுதியில் உள்ள 8 குளங்களுக்கும், மற்றொரு கால்வாய் மூலம் கசவனம்பட்டியில் உள்ள 8 குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்த குளங்கள் அனைத்தும் நிரம்பியதும் மீதமுள்ள தண்ணீர் குடகனாறு ஆற்றில் கலக்கிறது. எனவே பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இத்தனை பயன்தரும் கால்வாய்கள் முறையான பராமரிப்பு செய்யப்படவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. பிரதான கால்வாய் மட்டுமின்றி, அதில் இருந்து பிரிந்து செல்லும் 2 கால்வாய்களும் புதர் மண்டி காணப்படுகின்றன. அதிலும்ஒரு சில இடங்களில் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்து, இடிந்து கிடக்கிறது.
செடி-கொடிகள் வளர்ந்து அடர்ந்து விட்டதால் சில இடங்களில் சாலையோரம் கால்வாய் இருப்பதே தெரியவில்லை. அந்த அளவுக்கு புதர் மண்டி காணப்படுகிறது. கால்வாயில் சீராக தண்ணீர் வருவது பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் கூறினர். பருவமழை தீவிரம் அடையும் முன்பே கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தூர்வாரி சீரமைப்பு
குடகனாறு ஏரி, குளம் பாசன விவசாயிகள் நலச்சங்க செயலாளர் சுந்தர்ராஜ்:- கதிரையன்குளத்தில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய், குளத்தில் ஷட்டர் பகுதியை விட மேடாக இருக்கிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் வருவது தடைபட்டு மறுகாலில் அதிகமாக செல்கிறது. பிரதான கால்வாய், அதில் இருந்து பிரிந்து செல்லும் 2 கால்வாய்களும் ஆக்கிரமிப்பால் குறுகிவிட்டன.
எனவே பிரதான கால்வாய், 2 கால்வாய்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, கால்வாய்களை முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். மேலும் கதிரையன்குளத்தில் இருந்து மறுகால் செல்லும் தண்ணீர் நேரடியாக குடகனாற்றில் கலக்கிறது. எனவே அதை தடுத்து பிரதான கால்வாயில் திருப்பி விட வேண்டும். அதன்மூலம் 16-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்புவதோடு, 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும்.
அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த விவசாயி ராஜகோபால்:- பிரதான கால்வாய் மற்றும் சிந்தலக்குண்டு, கசவனம்பட்டிக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் புதர் மண்டி காணப்படுகின்றன. அதிலும் சிந்தலக்குண்டு பகுதிக்கு தண்ணீர் வரும் கால்வாயில் பெரும்பாலான பகுதியில் மரம், செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கால்வாயின் சிமெண்டு சுவர் சேதமடைந்து கற்கள் கால்வாயில் விழுந்து கிடக்கின்றன. பல இடங்களில் கால்வாயில் மண் நிரம்பி கிடக்கிறது. இதனால் சிந்தலக்குண்டு பகுதியில் இருக்கும் குளங்களுக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படுகிறது. எனவே கால்வாயை தூர்வாரி தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.