தரிசன வழியில் பக்தர்கள் அமர ரூ.17½ லட்சத்தில் இருக்கைகள்

பழனி முருகன் கோவிலில் தரிசன வழியில் பக்தர்கள் அமர ரூ.17½ லட்சத்தில் இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.
தரிசன வழிகள்
பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதானமாக உள்ளது. மேலும் பக்தர்கள் சிரமமின்றி சென்றுவர மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய சேவைகளும் உள்ளன. இந்த சேவைகளை பயன்படுத்த பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் மலைக்கோவிலில் தரிசனம் செய்ய இலவச பொதுதரிசன வழி உள்ளபோதிலும், விரைவாக தரிசனம் செய்ய ஏதுவாக ரூ.10 கட்டண தரிசனவழி மற்றும் ரூ.100 சிறப்பு கட்டண தரிசன வழி ஆகியவை உள்ளது. இதன்மூலமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலை பொறுத்தவரை வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் அனைத்து தரிசன வழிகளிலும் கூட்டம் அலைமோதும். அப்போது அனைத்து தரிசன வழிகளிலும் வெகுநேரம் காத்திருக்க நேரிடுவதால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதி அடைந்தனர். அதைத்தொடர்ந்து ரூ.100 கட்டண தரிசன வழியே செல்லும் பக்தர்கள் வசதிக்காக இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த வழியே செல்லும் பக்தர்கள் இருக்கையில் அமர்ந்து சற்று இளைப்பாறி செல்கின்றனர்.
ரூ.17½ லட்சத்தில் இருக்கை
இந்நிலையில் ரூ.10 கட்டண தரிசன வழியே செல்லும் பக்தர்கள் வசதிக்காக இருக்கை வசதி ஏற்படுத்த கோவில் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது ரூ.17½ லட்சத்தில் இருக்கைகள் கொண்டு வரப்பட்டு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக வடக்கு வெளிப்பிரகார பகுதியில் உள்ள தரிசன வழியில் இருக்கைகள் பொருத்தப்பட்டு உள்ளன. பிற பகுதிகளில் விரைவில் பொருத்தப்பட உள்ளது. தரிசன வழியில் காத்திருக்கும்போது அமர்வதற்கு ஏதுவாக இருக்கை வசதி செய்யப்பட்டதற்கு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.