வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி

வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
திருச்சி, உப்பிலியபுரத்தில் நடந்த வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
வெல்டிங் பட்டறை உரிமையாளர்
துறையூர் விநாயகம் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 35). வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் துறையூரிலிருந்து தம்மம்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒக்கரை பிரிவு சாலையில் சென்றபோது, மணல் சறுக்கி விட்டதில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் .உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு விபத்து
திருச்சி மேலசிந்தாமணி எஸ்.எஸ்.கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிசந்தர் (53). இவர் தனது ஸ்கூட்டரில் கே.கே.சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள், கோபிசந்தரை பரிசோதனை செய்துவிட்டு, அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவருடைய உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் அரசு பஸ்சை ஓட்டிவந்த டிரைவர் பாலமுருகன் (35) என்பவர் மீது திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.