ரூ.6½ லட்சம் மோசடி செய்த வேட்டவலம் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது
திமிரி அருகே ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.6½ லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.6½ லட்சம் மோசடி
ராணிப்பேட்டை மாவட்டம் வரகூர் பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 54). இவரின் மகனுக்கு ெரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக, திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அன்னை நகரை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் வெங்கடேசன் (49) ரூ.6½ லட்சம் பெற்றுள்ளார். ஆனால் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் ரவி பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு ரவியை ஒருமையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் வெங்கடேசன் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
2 பேர் கைது
இதுகுறித்து திமிரி போலீஸ் நிலையத்தில் ரவி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் தனிப்படை அமைத்து அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் கே.ஜி.எப். பகுதியை சேர்ந்த சுரேஷ் (41) என்பவரிடம் பணத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அருண்குமார், கோபிநாத், விஜயகுமார், சிலம்பரசன் ஆகியோர் கே.ஜி.எப். சென்று சுரேசை கைது செய்தனர். மேலும் அவர்கள் இருவரும் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி வாலாஜா சிறையில் அடைத்தனர்.