வருவாய் ஆய்வாளர் உள்பட 2 பேர் தற்கொலை
கரூர், நொய்யல் பகுதிகளில நடந்த வெவ்வேறு சம்பவத்தில் வருவாய் ஆய்வாளர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வருவாய் ஆய்வாளர் தற்கொலை
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சரவணன் (வயது 55). இவரது சகோதரி சாருமதியின் கணவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் சரவணன் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சரவணன் வாங்கல் கணக்குப்பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சரவணனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து சரவணனின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தற்கொலை
நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (28). இவரது மனைவி சர்மிளா (23). இவர்களுக்கு திருமணமாகி அகிலேஷ் (1)என்ற மகனும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் 2-வதாக பிறந்த பெண் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வது மற்றும் பராமரிப்பதில் அடிக்கடி கணவன், மனைவியிடையே குடும்பத் தகராறும், வாக்குவாதமும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
குடும்பத்தில் உள்ளவர்கள் முதல் குழந்தையுடன் சர்மிளாவை சரியாக பேசவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சர்மிளா விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அறையில் தனியாக இருந்த சர்மிளா மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.
சாவில் சந்தேகம்
இதைக்கண்ட அவரது குடும்பத்தார் சர்மிளாவின் தங்கை ஹரிப்பிரியாவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஹரிப்பிரியா மற்றும் உறவினர்கள் சர்மிளாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஹரிப்பிரியா தனது சகோதரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்மிளாவுக்கு திருமணமாகி சில ஆண்டுகளே ஆவதால் கரூர் கோட்டாட்சியரும் விசாரணை நடத்த உள்ளார்.