கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2½ வயது குழந்தை பலி
மணவாசி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. தம்பதி படுகாயம் அடைந்தனர்.
கார் பள்ளத்தில் கவிழ்ந்தது
கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் திவாகர் (வயது 34). இவரது மனைவி கீர்த்தனா (30). இந்த தம்பதிக்கு சஸ்மிதா (2½) என்ற பெண் குழந்தை இருந்தது. திவாகர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அங்கு வசித்து வருகிறார். இந்தநிலையில் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட திவாகர் முடிவு செய்தார். பின்னர் தனது காரில் மனைவி கீர்த்தனா, மகள் சஸ்மிதாவுடன் சென்னையில் இருந்து கரூர் வெங்கமேட்டிற்கு வந்து கொண்டிருந்தார். காரை திவாகர் ஓட்டி வந்தார்.
அந்த கார் நேற்று மதியம் கரூர் மாவட்டம் மணவாசி டோல்பிளாசா அருகே கட்டளை பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
குழந்தை பலி-தம்பதி படுகாயம்
இதில், காரின் இடிபாடுகளில் சிக்கி சஸ்மிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். திவாகர், கீர்த்தனா ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த கணவன்-மனைவியையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சஸ்மிதா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.