பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க கரும்பு கொள்முதல் செய்ய 20 குழுக்கள்-கலெக்டர் கார்மேகம் தகவல்

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் கரும்புகளை கொள்முதல் செய்ய 20 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
பொங்கல் பண்டிகை
இது தொடர்பாக கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வேளாண்மை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மூலம் கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 லட்சத்து 74 ஆயிரத்து 453 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்யும் வகையில் வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான 20 கொள்முதல் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்
இந்த குழுக்களில் உள்ள அலுவலர்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் படி கரும்பின் தரம், உயரம் ஆகியவற்றை சரிபார்த்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய உள்ளனர். மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விவரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்கக்கூடிய கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களை விவசாயிகள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.