சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது அ.தி.மு.க. முன்னாள் வக்கீல் ஜோதி பரபரப்பு பேட்டி

சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என அ.தி.மு.க.வின் முன்னாள் சட்ட ஆலோசகர் ஜோதி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க.வின் முன்னாள் சட்ட ஆலோசகர் ஜோதி. இவர் 2008-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்படுவதால் அவர் தி.மு.க.வில் இருந்து விலகி ஓ.பன்னீர் செல்வம் அணியில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப் பட்டது செல்லாது என்று வக்கீல் ஜோதி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்தது செல்லாது. கட்சியில் சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டாலும் அவர் அதற்கு முன்பு உறுப்பினராக இருந்த நாட்களின் எண்ணிக்கை ஒழுங்கு நடவடிக்கையின் போது காலாவதியாகி விடும்.
அதன் பிறகு அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகள் கழித்துதான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். எனவே இப்போதைய அவரது நியமனமும், அவரால் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லாது.
தண்டனை குற்றவாளிகள் கட்சியில் பொறுப்புக்கு வர முடியாது என்று அ.தி.மு.க. சட்டவிதிகளில் இல்லை.குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் தேர்தல் ஆணையம் குற்றவாளிகள் முக்கிய பொறுப்புகளில் இருந்து கட்சியை நடத்துவதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
இந்த நிலை மாற வேண்டும் என்றால் தண்டனை குற்றவாளிகளும், கொடுங்குற்றங்களுக்கு ஆளானவர்களும் அரசியல் கட்சிகளில் உறுப்பினராகவே இருக்க முடியாது என்று மக்கள் பிரதி நிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 மற்றும் 9-ல் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் சின்னம் பெறு வதற்காக தரப்படும் ‘பி பார்ம்‘களில் சசிகலா கையெழுத்திட்டால் சட்டப்படி செல்லாது. இதை எதிர்த்து முறையிட்டால் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கி இருந்தாலும் அது ரத்தாக வாய்ப்பிருக்கிறது.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் கட்சி சின்னம் பெறுவதற்காக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று கூடி பொதுக்குழுவை கூட்டுமாறு கோரிக்கை வைக்கலாம். அவைத் தலைவரும், பொருளாளரும் தற்போது தனி அணியாக இருப்பதால் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள தலைமை நிலைய பொறுப்பாளர்கள் பொதுக்குழுவை கூட்டலாம்.
பொதுச்செயலாளர் பணிகளை கவனிக்க ஒருவரை தற்காலிகமாக அங்கீகரிப்பதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தால் அந்த குறிப்பிட்ட நபர் ‘பி பார்மில்’ கையெழுத்திடலாம்.
அன்னிய செலவானி மோசடி வழக்கில் டி.டி.வி. தினகரன் ரூ.28 கோடி அபராதம் கட்ட வேண்டும். சசிகலா ஜெயிலுக்கு சென்ற நேரத்தில் டி.டி.வி. தினகரனை கட்சியில் சேர்த்து துணைப் பொதுச்செயலாளர் பதவியும் கொடுத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன் கட்சி உறுப்பினரானதையே இன்னும் அங்கீகரிக்காத போது அவர் பொதுச் செயலாளராக முடியாது.
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா எனக்கு முக்கியத்துவம் அளித்தது சசிகலா தரப்புக்கு பிடிக்க வில்லை. அவர்களுக்கு என்ன தேவையோ அதை கொடுத்து அனுப்பி விடுங்கள். கூடவே வைத்திருக்காதீர்கள் என்று நான் ஜெயலலிதாவிடம் சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அதன் மூலம் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள அவர் தவறி விட்டார்.
இவ்வாறு வக்கீல் ஜோதி கூறினார்.
Next Story