ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 109 பேருக்கு பணி நியமன ஆணை


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 109 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 1 April 2017 7:57 PM GMT (Updated: 1 April 2017 7:57 PM GMT)

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 109 பேருக்கு பணி நியமன ஆணைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணை வழங்குதல், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறித்த மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்குதல் மற்றும் பல்வேறு பள்ளிக் கல்வி திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

தமிழ்நாட்டில் 1 முதல் 9 வகுப்பு வரை முப்பருவ கல்விமுறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. முப்பருவக் கல்வி முறையால் மாணவர்களின் புத்தகச் சுமை குறைந்ததோடல்லாமல், கற்றலிலும் கூடுதல் கவனம் ஏற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை தமிழக கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல் எனலாம்.

25 சதவீத இட ஒதுக்கீடு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்கிறது.

இதன் காரணமாக சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. இவ்வகையில் மாணவர் சேர்க்கை 2013–2014–ம் கல்வியாண்டில் சேர்க்கை 49,864 ஆகவும், 2016–2017–ல் 97,506 ஆகவும் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

கூடுதல் நிதி

பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 74,316 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த அரசின் தொலை நோக்குப் பார்வையில் கல்வியே முன்னிலை வகித்து வருகிறது என்பதற்குச் சான்று, 2017–2018–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கென 26 ஆயிரத்து 932 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே ஆகும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் 2012–ம் ஆண்டு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாகத் தரம் உயர்த்தினார்கள்.

109 பேருக்கு...

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 9 துறைகள் புதியதாகத் தோற்றுவிக்கப்பட்டு, கூடுதலாக 36 கல்வியாளர் பணியிடங்கள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. தரமான தொடக்கக் கல்வி ஆசிரியர்களை உருவாக்கத் தரமான கல்வியாளர்களை நியமிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 11 முதுநிலை விரிவுரையாளர், 80 விரிவுரையாளர், 18 இளநிலை விரிவுரையாளர், என மொத்தம் 109 நபர்களுக்கு 31.3.2017 அன்று கலந்தாய்வு நடத்தப்பட்டு அவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் என்னால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இனிமையான நேரத்தில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பல்வேறு பணிகள் குறித்து குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக மெய்நிகர் வகுப்பறைகளை 770 பள்ளிகளிலும் 11 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் நிறுவியுள்ளது. தற்காலக் கணினி யுகத்தின் டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாணவர்களுக்குத் தேவையான பாடப்பொருள் சார்ந்த 950 காணொலிகள் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒத்துழைப்பு

மாணவர்களின் கற்றலை இனிமையாக்க ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடல்களை அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு காணொலியாக உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வெளியிடப்பட்ட தாயெனப்படுவது தமிழ் என்னும் குறுந்தகடு அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

நாட்டிலேயே முதன்மையான மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற என்னுடைய கூர்நோக்கை மெய்யாக்குவதில் ஒவ்வொரு அரசுப் பணியாளரும், ஆசிரியரும் என்னோடு இணைந்து செயலாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா நமக்கு அன்பு கட்டளையிட்டார்கள். அவரின் கட்டளையை ஏற்று அரசுப் பணியாளர்களும் ஆசிரியர்களான நீங்களும் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக இந்த அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

மாணவர்கள் தங்களது பாடங்களை பொருள் உணர்ந்து, விளக்கங்களுடன், புதிய தொழில் நுட்ப துணையுடன் பயின்றிடும் வகையில், பாடப்புத்தகங்களில் உள்ள அச்சுப்பகுதிகளுடன் படங்கள், குரல் ஒலிகள் மற்றும் அசைவூட்டப்படங்களை உட்புகுத்தி 12 லட்சம் மாணவர்கள் பயனடையும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள 10–ம் வகுப்பு மின்னியப் பதிப்புப்பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் செல்போன் மூலம் பாடங்களை படிக்கலாம்.  இவ்வாறு அவர் பேசினார்.

கட்டிடங்கள்

நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 13 மாவட்டங்களில் 36 கூடுதல் பள்ளிக்கட்டிடங்கள், 286 பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறைகள் என 284 கோடியே 9 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பள்ளிக்கல்வித் துறை கட்டிடங்களை திறந்து வைத்தார். கோவை, பெரம்பலூர், தர்மபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு 10 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.


Next Story