தேசத்துரோக வழக்கில் கோர்ட்டில் திடீர் சரண் வைகோவுக்கு 15 நாள் ஜெயில்

தேசத்துரோக வழக்கில் வைகோ கோர்ட்டில் திடீரென சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
சென்னை,
புழல் மத்திய சிறையில் வைகோ அடைக்கப்பட்டார்.
திடீர் சரண்ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது, சென்னை எழும்பூர் 14–வது கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு ஒன்று தொடரப்பட்டு நிலுவையில் இருந்தது. கடந்த 2009–ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், அவர்மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நேற்று எழும்பூர் 14–வது கோர்ட்டில் வைகோ திடீரென்று ஆஜர் ஆனார். 14–வது கோர்ட்டு (பொறுப்பு) மாஜிஸ்திரேட்டு கோபிநாத் முன்னிலையில், ஆஜரான வைகோ தன்மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கில் கோர்ட்டில் சரண் அடைவதாக தெரிவித்தார். அது தொடர்பாக மனு ஒன்றையும் அவர் தாக்கல் செய்தார். வைகோ திடீரென்று கோர்ட்டுக்கு வந்ததால், ம.தி.மு.க.வைச் சேர்ந்த ஏராளமான வக்கீல்களும், கோர்ட்டு வளாகத்தில் திரண்டனர். கோர்ட்டு ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
சிறையில் அடையுங்கள்கோர்ட்டில் சரண் அடைந்த வைகோவிடம், சொந்த ஜாமீனில் செல்லுமாறு மாஜிஸ்திரேட்டு கோபிநாத் கேட்டுக்கொண்டார். ஆனால், ஜாமீனில் வெளியே செல்ல விரும்பவில்லை என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுத்து தன்னை சிறையில் அடைக்க உத்தரவிடுமாறும், மாஜிஸ்திரேட்டிடம் வைகோ தெரிவித்தார்.
யாரும் எதிர்பாராத வகையில், வைகோ தன்னை சிறையில் அடைக்க கூறியதால் கோர்ட்டில் பெரும் பதற்றம் காணப்பட்டது. இதுதொடர்பாக தனது தீர்ப்பை பின்னர் வழங்குவதாக தெரிவித்த, மாஜிஸ்திரேட்டு வழக்கை சிறிது நேரம் தள்ளி வைத்தார். மீண்டும் வழக்கு விசாரணை வரும்வரை வைகோ கோர்ட்டு அருகே உள்ள ஒரு அறையில், உட்கார வைக்கப்பட்டார்.
சிறையில் அடைப்புஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு ஏப்ரல் 17–ந்தேதி வரை 15 நாட்கள் வைகோவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கை சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர். எனவே ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரையும் கோர்ட்டில் ஆஜராக மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார்.
அதனடிப்படையில் ஆயிரம் விளக்கு இன்ஸ்பெக்டர் தயாளனும் கோர்ட்டில் ஆஜரானார். பிற்பகல் 2.45 மணியளவில் வைகோ போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு கூடியிருந்த ம.தி.மு.க தொண்டர்களும், வக்கீல்களும், வைகோ வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர். மாலையில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆவேச பேட்டிமுன்னதாக போலீஸ் வேனில் ஏற்றப்படுவதற்கு முன்பு அங்கு திரண்டிருந்த நிருபர்களுக்கு வைகோ பேட்டியளித்தார். அப்போது அவர் ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது:–
இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவது குறித்தும், ஈழத்தமிழர்களை தாக்குவதற்கு இலங்கை அரசுக்கு போர்த்தளவாடங்களை கொடுக்காதீர்கள் என்று இந்திய அரசை வலியுறுத்தியும் நான் பலமுறை கடிதங்கள் அனுப்பியுள்ளேன். அப்போது, பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம் நேரிலும், கடிதம் கொடுத்துள்ளேன். இந்த கடிதங்களை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற தலைப்பில் வெளியிட்டேன்.
அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா 2009–ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. அதன்பிறகு 5 மாதங்கள் கழித்து நூல் வெளியீட்டு விழாவில், நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம் சாட்டி, 2009–ம் ஆண்டு டிசம்பர் மாதம் என்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 12 மாதங்கள் கழித்து, 2010 டிசம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் என்மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அரசு, இந்த வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நிலுவையில் போட்டுவிட்டது. முடக்கப்பட்டிருந்த எனது பாஸ்போர்ட்டை மீட்பதற்கு இந்த கோர்ட்டின் சான்றிதழ் தேவைப்பட்டது.
ஜாமீனில் போகாதது ஏன்?அதனால் இந்த கோர்ட்டில் சரண் அடைந்தேன். மாஜிஸ்திரேட்டு என்னை ஜாமீனில் போகுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், நான் ஜாமீனில் செல்ல மறுத்துவிட்டேன். இலங்கையில் 1½ லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த இனப்படுகொலைக்கு, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசும், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசும் தான் காரணம் என்பதை நாட்டு மக்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் தெரிவிப்பதற்காகவே நான் ஜாமீனில் வரவிரும்பவில்லை.
போராட்டத்தில் ஈடுபடக்கூடாதுஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சர்வதேச கோர்ட்டில் கூட விசாரணை நடக்காமல் முடக்கப்பட்டுவிட்டது. நூல்வெளியீட்டு விழாவில் நான் பேசியதை மறுக்கவில்லை, ஒப்புக்கொள்கிறேன். இதற்காக எனக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அளித்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.
என்னை சிறைக்கு அனுப்பியதால் ம.தி.மு.க. தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். சிறைக்குக்கூட என்னை பார்ப்பதற்கு ம.தி.மு.க.வினர் வரக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன். நன்மாறன் உள்ளிட்ட4 வக்கீல்கள் மட்டுமே, சிறையில் என்னை சந்திப்பார்கள்.
நான் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின்படி தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றுகிற பணியில் ம.தி.மு.க. தொண்டர்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.