தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் எடப்பாடி பழனிசாமி அரசு தோல்வி அடைந்து விட்டது; டாக்டர் ராமதாஸ் அறிக்கை


தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் எடப்பாடி பழனிசாமி அரசு தோல்வி அடைந்து விட்டது; டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2017 11:15 PM IST (Updated: 7 Jun 2017 9:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் எடப்பாடி பழனிசாமி அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பதவியில் நீடிக்க தகுதி இல்லை

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18–ம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபித்தபோது அவருக்கு 122 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருந்தது. அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் டி.டி.வி.தினகரனை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையும் மீறி 25 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியிருக்கின்றனர் என்றால் அவர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று தான் பொருள்.

பழனிசாமி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, அவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறவில்லை. அவ்வாறு திரும்ப பெறுவதாக அறிவித்தால், அடுத்த நிமிடமே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியின் ஆதரவு 97 உறுப்பினர்களாக குறைந்து அரசு கவிழ்ந்து விடும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பதவியில் நீடிக்க எந்த தகுதியும் இல்லை.

தோல்வி அடைந்து விட்டது

எடப்பாடி பழனிசாமி அரசு பதவியேற்று 112 நாட்களாகி விட்ட நிலையில், சொல்லிக்கொள்ளும்படி ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது, வறட்சியின் கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை, அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 450–க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நீதியும், நிதி உதவியும் பெற்றுத்தருவது, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை உள்ளிட்ட தமிழக மக்கள் நலன் சார்ந்த அனைத்து பிரச்சினைகளிலும் எடப்பாடி பழனிசாமி அரசு தோல்வி அடைந்து விட்டது.

தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமையோ, தகுதியோ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு இல்லை. இந்த அரசு நீடிப்பதை விட முடிவுக்கு வருவது தான் மக்களுக்கு நன்மை பயக்கும். எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story