எழிலக வளாகத்தில் உள்ள ஹூமாயூன் மகால் கட்டிடத்தை ரூ.20 கோடியில் புதுப்பிக்க திட்டம்

சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள ஹூமாயூன் மகால் கட்டிடத்தை ரூ.20 கோடி செலவில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணியில் பொதுப்பணித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை,
216 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கலச மகால் கட்டிடம் கடந்த 2012–ம் ஆண்டு ஜனவரி 16–ந்தேதி தீப்பிடித்து எரிந்தது. இதில் கட்டிடத்தின் மேல் தளம் இடிந்து விழுந்ததுடன், தரைதளத்தில் உள்ள 46 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவு கொண்ட பகுதியும் முற்றிலுமாக சேதமடைந்தது.
கலைநுணுக்கத்துடன் சீரமைப்புஇந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சமூகநல இயக்க அலுவலகத்தின் தீ விபத்தில் பொருட்களும் சேதமடைந்தன. இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி கட்டிடத்தின் ஒரு பகுதி, பழமை மாறாத வகையில் கலைநுணுக்கத்துடன் சீரமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்துக்கு ‘யுனெஸ்கோ விருது’க்காக விண்ணப்பிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–
ரூ.20 கோடியில் பணிதீ விபத்தில் முற்றிலுமாக சேதமடைந்த 216 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலச மகால் கட்டிடத்தை அதன் பழமை மாறாமல் புதுப்பித்திருப்பது பெரிய சாதனையாகும். இதன் மூலம் தமிழக பொதுப்பணித்துறைக்கு பெரிய அனுபவம் கிடைத்துள்ளது.
ஹூமாயூன் மகால் கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடிந்து விழுந்தது. கலச மகால் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டதை போல் ஹூமாயூன் மகால் கட்டிடத்தையும் பழமை மாறாமல் புதுப்பிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன்படி ஹூமாயூன் மகால் கட்டிடத்தை பழமை மாறாத வகையில் ரூ.20 கோடி செலவில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.