சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்


சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2017 5:45 AM IST (Updated: 3 Sept 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடியவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா.

சென்னை,

இவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத வேதனையில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.

உருவ பொம்மை எரிப்பு

சென்னை அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே நேற்று காலை 10.50 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அப்போது மாணவர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதோடு, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து கோஷமிட்டனர். சாலையில் படுத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

முற்றுகையிட முயற்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை தடுத்ததால், அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல், அசோக்நகர் 100 அடி சாலையிலும் போராட்டம் நடத்தி மோடியின் உருவ பொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்தனர்.

முதல்-அமைச்சர் வீடு


சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு முன்பு மது குடிப்போர் சங்க மாநில தலைவர் செல்லப்பாண்டியன், ஆறுமுகம் ஆகியோர் அனிதாவின் படத்தை கையில் ஏந்தியவாறு வந்து நின்றனர். அவர்கள் எடப்பாடி பழனி சாமியை அவதூறாக பேசியதுடன் மண்ணை வாரி தூற்றினார்கள்.
அவர்கள் 2 பேரையும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர்.

குண்டுக்கட்டாக தூக்கி...


புரட்சிகர இளைஞர் முன்னணியினர், மருத்துவ கவுன்சிலிங் நடந்து வரும் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதை அறிந்த போலீசார் மருத்துவமனை முன்பாக தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தினார்கள்.
காலை 11.30 மணிக்கு மருத்துவமனையை நோக்கி கோஷமிட்டபடி வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் போலீசாரை மீறி அவர்கள் மருத்துவ மனையை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த 20 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினார்கள்.

சாலை மறியல்

இந்த போராட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் சென்னை அண்ணா சாலை, அண்ணா சிலை அருகே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரை சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றார்கள்.

பிற்பகல் 12 மணி அளவில் ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தை ஒட்டியுள்ள பகுதியில் மெரினா எழுச்சி இயக்கம் சார்பில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு எதிரே பிற்பகல் 12.15 மணி அளவில் அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம், இளைஞர் பெருமன்றம், மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்தவர்கள் என சுமார் 25-க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அந்த சமயத்தில் சிலர் மோடியின் உருவ பொம்மையை சாலையின் நடுவே வைத்து எரித்தனர்.

ரெயில் மறியல்

தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பிற்பகல் 2.50 மணி அளவில் தாம்பரம்-சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து 11 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதனால் மின்சார ரெயில் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க. அலுவலகம்

பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக தியாகராயநகரில் உள்ள தியாகராய சாலையில் திராவிட விடுதலை கழகத்தினர் திரண்டனர். பிரதமர் மோடிக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

தியாகராய சாலையில் இருந்து பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில் அவர்கள் மோடியின் உருவ பொம்மையை எரித்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
இதையடுத்து 50 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். போராட்டம் காரணமாக பா.ஜ.க. அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நளினி சிதம்பரம் வீடு

நீட் தேர்வுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய நளினி சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ளது. அவருடைய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்தவர்கள் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரில் இருந்து பைகிராப்ட்ஸ் சாலை வரை ஊர்வலமாக சென்றனர்.

போலீஸ் தடுப்பை மீறி செல்ல முயன்ற 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.

சென்னையில் நேற்று மொத்தம் 32 இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் என நடைபெற்றன. இதில், 15 ஆர்ப்பாட்டங்கள் அனுமதி பெற்று நடைபெற்றவை. எனவே, இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யவில்லை. மீதமுள்ள 17 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 735 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம் - திருவள்ளூர்

காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், நகர செயலாளர் சன்பிராண்டு ஆறுமுகம், நிர்வாகிகள் சி.வி.எம்.அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜீ.வி.மதியழகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி., முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான எம்.ஜி.ஆர். சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங் கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவில் அணிவகுத்து நின்றன.

பூந்தமல்லியை அடுத்த குமணண்சாவடி பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் கடை அடைப்பு


மாணவி அனிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு நடத்த அரியலூர் மாவட்ட வணிகர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரியலூர் நகரில் பஸ்நிலையம், மார்க்கெட் தெரு, எம்.பி.கோவில் தெரு, காந்தி மார்க்கெட் தெரு, பெரியகடை தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் தா.பழூர், மீன்சுருட்டி, செந்துறை, ஆண்டிமடம், திருமானூர், கீழப்பழூர், ஆர்.எஸ்.மாத்தூர், வி.கைகாட்டி, விக்கிரமங்கலம், ஜெயங்கொண்டம் உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மாவட்டம் முழுவதும் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மருத்துவமனை மற்றும் மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன.

பஸ்கள் வழக்கம் போல் ஓடின

அரியலூர் மாவட்டத்தில் நேற்று வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. எனினும் பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் சென்றதால், செந்துறை செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் வேன், கார்களில் சென்று மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழகம் முழுவதும்


இதுபோல தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவை நடைபெற்றது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story