திட்டங்களுக்கு குறுக்கே வருபவர்களுக்கு மக்கள் பாடம் கற்று தருவார்கள்: முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு

மக்கள் நல திட்டங்களுக்காக ஆட்சி நடத்துகிறோம். திட்டங்களுக்கு குறுக்கே வருபவர்களுக்கு மக்கள் பாடம் கற்று தருவார்கள் என முதல் அமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.
கரூரில் நடந்து வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசும்பொழுது, கரூர் டி.என்.பி.எல். ஆலையை கடந்த 1984ல் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்.
1995ம் ஆண்டில் கரூர் தனி மாவட்டம் என ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. ஜவுளி ஏற்றுமதி அதிகம் நடைபெறும் மாவட்டம் கரூர் ஆகும். பேருந்து கட்டும் தொழில், கொசுவலை உற்பத்தி ஆலைகள் இங்கு அதிகம். செழிப்பு நிறைந்த, தொழில் நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. தோகைமலையில் கிடைக்கும் பளிங்கு கற்கள் உலக புகழ் பெற்றவை என பேசியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு தினமும் பொய் கூறுகிறார்கள். இந்த அரசு செய்த சாதனைகளை எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் மக்கள் நல திட்டங்களுக்காக ஆட்சி நடத்துகிறோம். திட்டங்களுக்கு குறுக்கே வருபவர்களுக்கு மக்கள் பாடம் கற்று தருவார்கள்.
எதிர்க்கட்சிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து கொண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை விமர்சித்து வருகின்றனர் என அவர் பேசியுள்ளார்.