தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க சோனியா, ராகுல்காந்திக்கு முழு அதிகாரம்


தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க சோனியா, ராகுல்காந்திக்கு முழு அதிகாரம்
x
தினத்தந்தி 7 Oct 2017 3:30 AM IST (Updated: 7 Oct 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க சோனியா, ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் அளித்து 19 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தல் அடிப்படையில் மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் இணைந்து புதிய தலைவரை தேர்வு செய்து, கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதை அகில இந்திய தலைமை பரிசீலித்து ஒப்புதல் வழங்கும்.

இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரிகள் பாபிராஜூ, சஞ்சய் தத் தலைமை தாங்கினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், துணை தலைவர் எச்.வசந்தகுமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, பொதுச்செயலாளர் தணிகாசலம், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், மகளிர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத், தமிழக தலைவர் ஜான்சிராணி, முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் உள்பட 688 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 72 மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

பொதுக்குழுவில், தமிழக காங்கிரஸ் தலைவர், மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் முழு அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்திக்கு அளித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.

பின்னர் திருநாவுக்கர சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்சியில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் புதிதாக 21 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு காமராஜர் பிறந்தநாளுக்குள் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் மலரச்செய்ய வேண்டும் என்பதையே இலக்காக கொண்டு இணைந்து செயல்படுவோம்.

கட்சியை பலப்படுத்தும் வகையில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக விரைவில் ராகுல் காந்தி தமிழகம் வர இருக்கிறார்.

புதிதாக பதவியேற்றுள்ள கவர்னரை வரவேற்கிறோம். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சவால்கள் அவருக்கு காத்திருக்கின்றன. வாக்கி-டாக்கி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தனியாகவோ அல்லது தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து கவர்னரிடம் மனு கொடுக்கப்படும்.

டெங்கு காய்ச்சல் விவகாரத்தில், பொறுப்பு ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். கோவையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான அச்சகத்தை, மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள அச்சகத்தோடு இணைக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த முடிவை கைவிட வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story