ஆக்கிரமிப்புகளால் சென்னை புறநகரில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்


ஆக்கிரமிப்புகளால் சென்னை புறநகரில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
x
தினத்தந்தி 8 Nov 2017 5:15 AM IST (Updated: 8 Nov 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் 8 நாட்களாக தேங்கி இருக்கும் நீர் வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

சென்னை,

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் 8 நாட்களாக தேங்கி இருக்கும் நீர் வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த 31-ந்தேதியில் இருந்து மழை பெய்து வருகிறது. முதல் 2 நாட்கள் நல்ல மழை பெய்தது. அதன்பின்னர், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீ புரம் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி, ஊராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, தற்போது மீண்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் தேங்கி இருந்த மழைநீரை ஊழியர்கள் வெளியேற்றினார்கள். அந்த நீர் கூவம், அடையாறு ஆறு வழியாக கடலில் வீணாக கலந்தது.

புறநகர் பகுதிகளிலோ இன்னும் மீளாத சோகம் நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. என்னதான் அரசின் நடவடிக்கை தீவிரமாக இருந்தாலும், ஆக்கிரமிப்பின் கோரதாண்டவத்தால் தான் சென்னை புறநகர் பகுதிகள் மழைநீரில் மிதக்கிறது.

புறநகர் பகுதிகளான கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, மணிமங்கலம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியவில்லை.

அந்த பகுதி பொதுமக்கள் சொந்த வீடுகள் இருந்தும் அகதிகள் போல உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் குடிபெயர்ந்து இருப்பதாக வேதனையோடு தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோவிலம்பாக்கம் பகுதியில் பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்புகளால் தான் மழை நீர் சூழ்ந்து இருக்கிறது.

கோவிலம்பாக்கம் டி.என்.பி.எல். காலனியை ஒட்டியுள்ள கால்வாய் பகுதியில் நீர் செல்வதற்கு வழியில்லாமல் நிரம்பி இருக்கிறது. அந்த வழித்தடத்தில் குறுக்கே பல இடங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. 80 அடி அகலத்தில் இருந்த அந்த கால்வாய் 20 அடி அகலத்தில் குறுக்கப்பட்டு இருப்பதாக பலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேபோல், பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் நீர்வழித்தடங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. இதற்கு எல்லாம் ஒரே தீர்வு ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழித்தடங்கள் செல்வதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும். அப்படி ஏற்படுத்தினால் மட்டுமே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவமழை காலங்களில் நிம்மதியாக வீட்டில் வசிக்க முடியும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி பகுதியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதா ஆகியோர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் நிருபர்கள் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர்கள், ‘வடிகால் பணிகள் நீண்ட கால திட்டம். அதில் 60 சதவீதம் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு மழைநீர் தேங்கும் சூழல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டது. அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்குள், நீதிமன்றத்தில் சிலர் தடை ஆணை வாங்கிவிட்டார்கள். மக்களும் இதை மறந்துவிடுகிறார்கள். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும்’ என்றனர்.

Next Story