தாமதமாக வந்து முன்கூட்டி மனுத்தாக்கல்: நடிகர் விஷால்-ஜெ.தீபாவுக்கு சுயேச்சைகள் எதிர்ப்பு


தாமதமாக வந்து முன்கூட்டி மனுத்தாக்கல்: நடிகர் விஷால்-ஜெ.தீபாவுக்கு சுயேச்சைகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 Dec 2017 4:15 AM IST (Updated: 5 Dec 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

தாமதமாக வந்து முன்கூட்டி மனுத்தாக்கல் செய்த நடிகர் விஷால் -ஜெ.தீபாவை கண்டித்து தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் முன்பு சுயேச்சைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் காணும் நடிகர் விஷால் நேற்று மதியம் 12.30 மணிக்கு தண்டையார்பேட்டை பகுதிக்கு வந்தார்.

மண்டல அலுவலகத்தில் கூட்டம் அலைமோதும் தகவலறிந்து, நடிகர் விஷால் தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர்கேன் ஆட்டோவில் அமர்ந்திருந்தார்.

பின்னர் மதியம் 2.14 மணியளவில், வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக மண்டல அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். மண்டல அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுயேச்சைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.

விஷால், தீபாவுக்கு டோக்கன்

இந்தநிலையில் நடிகர் விஷால் நேரடியாக மனுத்தாக்கல் செய்ய வந்ததால், சுயேச்சைகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று அவரிடம் நேரடியாக விவாதமும் செய்தனர்.

அதன் பின்னர் நடிகர் விஷாலுக்கும் ‘டோக்கன்’ வழங்கப்பட்டது. அவருக்கு 61-வது டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபாவின் வேட்புமனுவை அவருடைய அணியை சேர்ந்த வக்கீல் தொண்டன் சுப்பிரமணி மதியம் 2.50 மணியளவில் எடுத்து வந்தார். அவருக்கு 91-வது டோக்கன் வழங்கப்பட்டது. ஜெ.தீபா மதியம் 3.15 மணியளவில் மண்டல அலுவலகத்துக்கு வந்தார்.

டோக்கன் பெற்ற சுயேச்சைகளை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அழைத்தபோது, சிலர் வெளியே சென்று இருந்தனர். இதனால் டோக்கன் முறை சுழற்சி முறையில் மாற்றப்பட்டது. அப்போது விஷாலுக்கு 5-வது டோக்கனும், ஜெ.தீபாவுக்கு 9-வது டோக்கனும் கிடைத்தது. பின்னர் விஷால் 4 மணிக்கும், ஜெ.தீபா 5 மணிக்கும் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

டிராபிக் ராமசாமி ஆவேசம்

தாமதமாக வந்து முன்கூட்டி அவர்களை வேட்புமனுத்தாக்கல் செய்ய அனுமதித்ததை கண்டித்து சுயேச்சைகள் சிலர் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விஷாலுக்கும், ஜெ.தீபாவுக்கும் எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

அப்போது அங்கு இருந்த சமூக ஆர்வலர் ‘டிராபிக்’ ராமசாமியும் ஆவேசம் அடைந்தார். நடிகர் விஷாலையும், ஜெ.தீபாவையும் வேட்புமனுத்தாக்கல் செய்ய விரை வில் அனுமதித்ததை கண்டித்து அவர் மண்டல அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.

அப்போது டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘விஷாலும், ஜெ.தீபாவும் சுயேச்சை வேட்பாளர்கள் தான். ஆனால் போலீஸ் அதிகாரிகள் அவர்களுக்கு மட்டும் முன்னூரிமை கொடுக்கின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுக்க போகிறேன்’ என்றார்.

சுயேச்சைகள் எதிர்ப்பால் நடிகர் விஷாலும், ஜெ.தீபாவும் தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் 2 மணி நேரம் காத்திருந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நேற்று காணப்பட்டது.

வேட்புமனுத்தாக்கல்

நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக சென்னை தியாகராயநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் ராமாவரம் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, ராஜா அண்ணாமலைபுரம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் சிலை ஆகியவற்றுக்கும், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் வெற்றி பெற்றது போல இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

என்னுடைய படப்பிடிப்பு எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மக்களுக்காக நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிறேன் என்றால் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய குறிக்கோள் என்று கூறினார்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வேட்புமனு தாக்கல் செய்த பின்பு, “கடந்த முறை சுயேட்சை வேட்பாளராக எனக்கு ‘படகு’ சின்னம் வழங்கப்பட்டது. அதே சின்னம் கேட்டு உள்ளேன். அவர்கள் எந்த சின்னம் தந்தாலும் ஏற்றுக் கொள்வேன். உண்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடந்தால் நிச்சயமாக வெற்றிவாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்.

கடந்த முறை பணப்பட்டுவாடா செய்தவர்களுக்கு மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தது தவறு. இது ஜனநாயக விரோதம் ஆகும். டி.டி.வி.தினகரனை போட்டியாகவே நான் நினைக்கவில்லை. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான் எனக்கு போட்டி என்றார். 

Next Story