பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் ஆய்வு செய்ய முடியுமா? நாராயணசாமி கேள்வி


பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் ஆய்வு செய்ய முடியுமா? நாராயணசாமி கேள்வி
x

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் ஆய்வு செய்ய முடியுமா? என்று புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை

சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுச்சேரி மாநிலத்தில் பிறரை விமானத்தில் இந்த வகுப்பில் செல்லக்கூடாது என்று கூறும் துணைநிலை கவர்னர் எந்த வகுப்பில் செல்கிறார் என்பதை கேட்க வேண்டும். புதுச்சேரி நிதிநிலையை சரிசெய்ய வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணி. இதுபற்றி கேட்க கவர்னருக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது.

விமானத்தில் செல்வதால் மட்டும் அரசின் நிதி குறைவதாகவோ, அதிகமாவதாகவோ சொல்ல முடியாது. கவர்னருக்கு அனுமதிக்கப்பட்டது 22 அதிகாரிகள் தான். ஆனால் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 64 பேரை கவர்னரின் பணிக்காக வைத்திருக்கிறார். அவர்களை முதலில் திருப்பி அனுப்ப வேண்டும்.

தமிழகத்தில் கவர்னர் ஆய்வு செய்ய எந்த விதிகளும் கிடையாது. துணைநிலை கவர்னருக்காவது கூடுதலாக ஒரு அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு ஒப்புதல் தரவேண்டியது தான் கவர்னரின் வேலை. தமிழகத்தில் கவர்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்.

இந்தியாவில் பாரதீய ஜனதா ஆளாத மாநிலங்களில் போட்டி அரசாங்கம் நடத்துவதற்கு கவர்னர், துணைநிலை கவர்னர்களை பயன்படுத்தி வருகின்றனர். மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் ஆய்வு செய்கிறார்களா? கவர்னர்கள் மூலமாக நிர்வாகத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். இது ஜனநாயக படுகொலை.

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்து உள்ளது. பிரதமர் தலைமையில் மத்திய மந்திரிகள், பாரதீய ஜனதா முதல்–மந்திரிகள், எம்.பி.க்கள் களத்தில் நின்று வேலை செய்தார்கள். ஆனால் ராகுல்காந்தி தனியாக சென்று பிரசாரம் செய்ததற்கு கிடைத்த வெற்றி இது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story