பாதுகாப்புத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நாளை ராணுவ கண்காட்சி தொடக்கம்

சென்னை-மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நாளை தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை,
இந்திய ராணுவம் தங்களுக்கு தேவையான பெரும்பாலான தளவாட பொருட் களை தயாரித்து வருகிறது. அத்துடன் நம் நாட்டில் உள்ள ஒரு சில சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ராணுவத்திற்கு தேவையான தளவாட பொருட்களை தயாரித்து வழங்குகின்றன. அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்த கண்காட்சி சென்னை- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு கண்காட்சி நடத்துவதன் நோக்கம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகிறார். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் நிலத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் சார்பில் கருத்தரங்குகள் நடக்கிறது. முப்படையினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
கடலோர காவல் படைக்கு ரோந்து பணிக்காக உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் தளத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
இதனை பாதுகாப்புத்துறை இணை-மந்திரி சுபாஷ் பாம்ரே தொடங்கி வைக்கிறார். இந்திய கடலோர காவல்படை இயக்குனர் ஜெனரல் ராஜேந்திர சிங், கிழக்கு கடலோர காவல் படை ஐ.ஜி. ராஜன் பர்க்கோத்ரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
தொடர்ந்து 12-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி முறைப்படி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அத்துடன் கண்காட்சி வளாகத்தில் நம்நாட்டுக்கான அரங்கையும் அவர் திறந்து வைத்து பேசுகிறார். முப்படையினரின் அணிவகுப்பும், மெய்சிலிர்க்கும் சாகச நிகழ்ச்சிகளும் திருவிடந்தையில் உள்ள கடற்கரையில் நடக்கிறது. 13-ந்தேதி இந்தியா-ரஷியா நாட்டு ராணுவ தொழில் துறை மாநாடு நடக்கிறது. இதில் இரு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான தொழில் துறை நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்.
பொதுமக்கள் 14-ந்தேதி அரசு வழங்கிய அடையாள அட்டை ஏதாவது ஒன்றை காண்பித்து கண்காட்சியை பார்வையிடலாம். அப்போது முப்படைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. கண்காட்சி ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட மாநில தொழில் துறை அதிகாரிகளும் செய்து வருகின்றனர். கண்காட்சி நடப்பதையொட்டி திருவிடந்தை பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு, செல்போன் டவர்கள், உயர்அழுத்த மின்கம்பங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
ராணுவ தளவாட கண்காட்சி நடப்பதையொட்டி, சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராணுவ தளவாட கண்காட்சிக்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் நாளை முதல் 14-ந் தேதி வரை போக்குவரத்து மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நேரடியாக செல்லும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை சோதனைச் சாவடியிலிருந்து பழைய மகாபலிபுரம் சாலை வழியாகவும், கோவளம் சந்திப்பில் இருந்து கேளம்பாக்கம் இணைப்பு சாலை வழியாகவும் பழைய மகாபலிபுரம் சாலையை அடைந்து திருப்போரூர் பூஞ்சேரி வழியாக புதுச்சேரி செல்லலாம்.
புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வரும் வாகனங்கள், வெங்கம்பாக்கத்தில் இருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாகவும், பூஞ்சேரி சந்திப்பு வழியாகவும் சென்னை செல்லலாம்.
11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை கண்காட்சிக்கு வர்த்தகம் தொடர்பாக சென்னையில் இருந்து வரும் வாகனங்கள், கோவளம் சந்திப்பு வழியாக அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள திருவிடந்தை வாகன நிறுத்தத்தை சென்றடையலாம். மாமல்லபுரம் பகுதியிலிருந்து வரும் வர்த்தகம் தொடர்பான வாகனங்கள், பேரூர் சந்திப்பைத் தாண்டி கண்காட்சியின் பின்புறமுள்ள வாகன நிறுத்தங்களை வந்தடையலாம்.
14-ந் தேதியன்று கண்காட்சியைக் காண வரும் பொது மக்கள், கோவளம் மற்றும் பேரூர் சந்திப்பு வழியாக கண்காட்சி திடலை அடைந்து இருசக்கர வாகனம், கார்களுக்கென ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தை வந்தடையலாம். அரசு பேருந்துகளின் மூலம் வருவோர், கண்காட்சிக்கு அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்தடையலாம்.
கண்காட்சி திடலை ஒட்டிய திருவிடந்தை, கோவளம், வடநெம்மேலி மற்றும் தெற்குப்பட்டு கிராம மக்களின் வாகனங்களும், பேருந்துகளும் சென்று வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story