‘போராடியது போதும் என்ற எண்ணத்திற்கு தமிழகம் வந்துவிடக்கூடாது’ டாக்டர் ராமதாஸ் அறிக்கை


‘போராடியது போதும் என்ற எண்ணத்திற்கு தமிழகம் வந்துவிடக்கூடாது’ டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 13 April 2018 2:47 AM IST (Updated: 13 April 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் போராடியது போதும் என்ற எண்ணத்திற்கு தமிழகம் வந்துவிடக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பு குறித்த வரைவுத் திட்டத்தை அடுத்த மாதம் 3-ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டுள்ள நிலையில், இந்த முறையும் தமிழகத்திற்கு துரோகம் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பான மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங்கின் கருத்து இதை உறுதி செய்கிறது.

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியிருப்பதாலேயே, அதை அமைக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெறும் பரிந்துரை தான். நாங்கள் அமைக்கவிருக்கும் அமைப்பு எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது நீதி அமைப்பாகவும் இருக்கலாம், நிர்வாக அமைப்பாகவும் இருக்கலாம். அதன் தலைவராக யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்” என்று யு.பி.சிங் கூறியுள்ளார்.

காவிரிப் பிரச்சினை 100 ஆண்டுகளுக்கு முன்பு எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கு மீண்டும் கொண்டு செல்வது தான் மத்திய அரசின் நோக்கம் ஆகும். அதற்கேற்ற வகையில் ஒரு சொத்தையான அமைப்பை உருவாக்கும் திட்டத்தை தான் வரும் மே 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்யப்போகிறது என்பது யு.பி.சிங்கின் பேட்டி மூலம் தெளிவாகிவிட்டது.

இவ்விஷயத்தில் மத்திய அரசு தெரிந்தே தவறு செய்கிறது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருப்பது இலவு காத்தக் கிளியின் கதையாக மாறிவிடும். கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக இந்த துரோகத்தை செய்யும் மத்திய அரசு, அதன் அடித்தளத்துக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தமிழகத்திற்கு நீதி வழங்கும்.

எனவே, காவிரி பிரச்சினையில் போராடியது போதும் என்ற எண்ணத்திற்கு தமிழகம் வந்துவிடக்கூடாது. மாறாக கூடுதல் விழிப்புடன் செயல்பட்டு மத்திய அரசின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வகையில் மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடவடிக்கைகளை தமிழகம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story