பேராசிரியையிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மை வெளியாகும் மு.க.ஸ்டாலின் பேட்டி

கவர்னர் நடவடிக்கையில் இறங்குவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும், கைது செய்யப்பட்ட பேராசிரியையிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மை வெளியாகும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 262–வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறாரே? என்று கேட்டனர்.இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது;– ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்பவர்தான் அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கும் தலைவராக விளங்குபவர். எனவே, அவர்தான் இந்தப் பிரச்சினையில் முறையான நடவடிக்கை எடுக்க முயற்சித்து இருக்க வேண்டும். ஆனால், பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் கவர்னர் எப்படி இதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்பது புரியவில்லை. இதில் ஏதோ குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது. எனவேதான், உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. அமைப்பு இதுகுறித்து விசாரணை நடத்தினால்தான் உண்மைகள் வெளியாகும் என்று நான் நேற்றைக்கே தெளிவாக எடுத்துரைத்தேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேராசிரியை நிர்மலாதேவியை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முழு விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அத்தனை பேரையும் சட்டத்தின் முன்நிறுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை என்று கூறியுள்ளார்.பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை மத்திய சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடவேண்டும். அப்போதுதான் மாணவிகளை உல்லாசத்திற்கு அழைத்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் யார் யார்? என்ற விவரம் அம்பலத்திற்கு வரும். தவறு செய்தவர்கள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் பதவி நிரந்தரமாக பறிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–சென்னை ஐகோர்ட்டே தானாக முன்வந்து பேராசிரியை நிர்மலாதேவி மீதான குற்றவியல் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். அதனால், தமிழக கவர்னரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். கவர்னரின் துணைவேந்தர் நியமனங்களை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.